1. செய்திகள்

5 மணி நேரத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை நட்ட காவல்துறை!

R. Balakrishnan
R. Balakrishnan
Police Planting Palm Seeds

வேலூர் மாவட்டம், சலமநத்தம் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில் 5,000 பனை விதைகள் (Palm Seed) நடும் பணியைத் தொடங்கி வைத்தார் வேலூர் மாவட்ட எஸ்.பி. செல்வகுமார்.

இது என்னுடைய மரம்

வேலூர் மாவட்டக் காவல்துறை சார்பில் ‘இது என்னுடைய மரம் என்ற பெயரில் ஐந்தே மணி நேரத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

வேலூர் அடுத்துள்ள சலமநத்தம் பகுதியில் மாவட்டக் காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் சுமார் 100 ஏக்கரில் அமைந்துள்ளது. பொட்டல் காடாக இருக்கும் இந்த மலையடிவாரப் பகுதியைப் பசுமையாக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கெனவே இங்கு சுமார் 1,500 மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பனை விதைகள் நடும் பணி

இந்நிலையில், மலையடிவாரப் பகுதியின் நீர்வளத்தைப் பாதுகாக்க, துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தின் எல்லைப் பகுதியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இன்று (அக்டோபர்16) காலை தொடங்கி வைத்தார். சலமநத்தம் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தைச் சுற்றிலும் சுமார் 8 கி.மீ. தொலைவுக்குக் காவல் துறையினர் வரிசையாக நின்று பனை விதைகளை நட்டனர்.

மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலான 700 பேர் உதவியுடன் பனை விதைகள் ஒரே நாளில் 5 மணி நேரத்தில் நடப்பட்டன. இதற்காக, வேலூர் ஆயுதப்படைக் காவலர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளிடம் இருந்து 5 ஆயிரம் பனை விதைகளைச் சேகரித்து, பாதுகாத்து வந்தனர்.

‘இது என்னுடைய மரம்’ என்ற பெயரில் நடைபெற்ற பனை விதை நடும் பணி குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறும்போது, ‘‘பனை மரம் நீர்வளத்தைச் சேமித்து மண் வளத்தைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது. சலமநத்தம் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் வீணாகிறது. இதனால் நீர்வளத்தைப் பாதுகாக்கவும், பயிற்சித் தளத்தைப் பசுமையாக்கவும் பனைமரத்தை வளர்க்க முடிவெடுத்தோம். இதற்காக 5 ஆயிரம் பனை விதைகள் (5,000 Palm Seed) எல்லைப் பகுதி முழுவதும் நட்டு, பராமரிக்கப்பட உள்ளது.

பனை விதை நடும் பணிக்காக துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தின் எல்லைப் பகுதியில் வளர்ந்திருந்த புதர்கள் அகற்றப்பட்டு நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு வழி ஏற்படுத்தப்பட்டு பனை விதை நடப்பட்டுள்ளது. அதேபோல், மலை மீதும் மரங்கள் வளர்க்க வசதியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், காவலர்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள், காவலர்கள் என 700 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பனை விதையை ‘இது என்னுடைய மரம்’ என்ற பெயரில் நட வேண்டும் என்று கூறினேன். நாளை ஒரு நாள் இங்கு அவர்கள் மீண்டும் வரும்போது அவர்கள் நட்ட விதை மரமாக வளர்ந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்’’ என்று செல்வகுமார் தெரிவித்தார்.

மேலும் படிக்க

கொரோனா உயிரிழப்பு குறைகிறது: உலக சுகாதார அமைப்பு தகவல்!

இயந்திரமயமான வாழ்வில் மீண்டும் வருமா உலக்கை உரல்

English Summary: Police Planting 5,000 palm seeds in 5 hours Published on: 16 October 2021, 08:50 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.