சிம் கார்டு டீலர்கள் தொடர்பான தகவல்கள் இனி போலீஸ் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது ஒன்றிய அரசு மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க மொத்தமாக சிம் கார்டு இணைப்புகளை வழங்குவதை நிறுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் தெரிவித்துள்ளார்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு மாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில் “இப்போது, புதிய டீலர்கள் (மொபைல் சிம் கார்டுகளின்) போலீஸ் சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டியது கட்டாயமாகும். இப்போது அனைத்து பாயின்ட் ஆஃப் சேல் டீலர்களுக்கும் பதிவு செய்வது கட்டாயமாகும்” என்று அறிவித்தார்.
மேற்குறிப்பிட்ட விதிகளை மீறுபவர்களுக்கு ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ஐடியில் 9 சிம்கள் வரை பெறும் வகையில் தற்போது நடைமுறை உள்ளது. இதனை 4 ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சஞ்சார் சாதி போர்ட்டல் தொடங்கப்பட்டதிலிருந்து, மோசடியாகப் பெறப்பட்ட 52 லட்சம் இணைப்புகளை அரசாங்கம் கண்டறிந்து செயலிழக்கச் செய்துள்ளது என்று அமைச்சர் கூறினார். மேலும், மொபைல் சிம் கார்டுகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள 67,000 டீலர்களையும் அரசாங்கம் தடுப்புப்பட்டியலில் (blacklisted) சேர்த்துள்ளது. மே 2023 முதல் 300 சிம் கார்டு டீலர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
”பொதுமக்கள் முன்பு (மொபைல்) சிம் கார்டுகளை மொத்தமாக வாங்கினர். இதற்காக சிம் கார்டுகளை மொத்தமாக வாங்கும் விதிமுறை இருந்தது. தற்போது, இந்த விதியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, முறையான வணிக இணைப்பு வசதியை நாங்கள் கொண்டு வருவோம், இது மோசடி அழைப்புகளை நிறுத்த உதவும்,” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
10 லட்சம் சிம் டீலர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு மேற்கொள்வதற்கு போதுமான அவகாசம் வழங்கப்படும் என்றும் வைஷ்ணவ் கூறினார். தொலைத்தொடர்புத் துறையும் மொத்த இணைப்புகள் வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும், அதற்குப் பதிலாக வணிக இணைப்பு என்ற புதிய யோசனை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு மே மாதம், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 1.8 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகளை பஞ்சாப் காவல்துறை முடக்கியது, மேலும் அத்தகைய சிம் கார்டுகளை வழங்கியதற்காக 17 பேரைக் கைது செய்தது.
பஞ்சாப் காவல்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து போலி ஐடிகளைப் பயன்படுத்தி சிம் கார்டுகளை விற்பதில் ஈடுபட்டுள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மீது தீவிரமான அடக்குமுறையை மேற்கொண்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் காண்க:
உங்க நகம் இந்த மாதிரி இருக்கா? அப்போ பிரச்சினை இருக்கலாம்
PM Vishwakarma Scheme: 18 பாரம்பரிய தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன்!
Share your comments