தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை.
கடந்த முறை அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த மளிகைப் பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொங்கல் பரிசு (Pongal Gift)
2023 ஆம் ஆண்டு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக, 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக உணவுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவாா். அதிகாரப்பூா்வ அறிவிப்பு இல்லாமல் எதையும் குறிப்பிட முடியாது. எனவே, பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு வராமல் எதையும் தெரிவிக்க இயலாது என்று அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பொங்கல் பண்டிகைக்கு, 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? 12 ஆம் தேதி குறைதீர் முகாம்!
தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
Share your comments