டெல்லியில் மோசமடைந்து வரும் காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் அதிகரித்து வரும் மாசு அளவு ஆகியவற்றினால் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது டெல்லி மாநில அரசு. இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் நவம்பர் 10-ஆம் தேதி வரை மூடப்படும் என்று டெல்லி மாநில கல்வி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்விச்சூழல் தடைப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு 6 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை கட்டுக்குள் வராத நிலையில் தற்போது பள்ளி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து நான்காவது நாளாக 'கடுமையான' பிரிவில் நீடித்தது (Severe category). சிஸ்டம் ஆஃப் ஏர் குவாலிட்டி ஃபார்காஸ்டிங் அண்ட் ரிசர்ச் (SAFAR-India) அறிக்கையின்படி, சனிக்கிழமையன்று 504 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு (AQI), ஞாயிற்றுக்கிழமை 410 என்ற அளவில் பதிவானது.
SAFAR-இந்தியாவின் தரவுகளின்படி, லோதி சாலைப் பகுதியில் காற்றின் தரம் 385 (மிகவும் மோசமானது) என அளவிடப்பட்டது, அதே நேரத்தில் டெல்லி பல்கலைக்கழகப் பகுதியில் AQI 456 (கடுமையானது) பதிவு செய்யப்பட்டது.
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் BS-VI விதிமுறைகளுக்கு இணங்காத வாகனங்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். அண்டை மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்கு இடையேயான அவசர கூட்டத்தையும் நடத்த அவர் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
GRAP-மூன்றாம் கட்டத்தின் படி தேசிய தலைநகர் டெல்லியில் குறிப்பிட்ட ரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அதிகப்பட்ச அளவிலான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில் பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். BS3 பெட்ரோல் மற்றும் BS4 டீசல் வாகனங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
BS3 பெட்ரோல் அல்லது BS4 டீசல் சான்றிதழைப் பெற்ற பழைய கார் அல்லது இரு சக்கர வாகனம் உங்களிடம் இருந்தால், அவை தேசிய தலைநகரப் பகுதியின் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்படாது. இந்த கட்டுப்பாடு உத்தரவானது ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் போன்ற அண்டை நகரங்களையும், உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மற்றும் நொய்டாவையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
மங்களகரமான செய்தி- வாரத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை சரிவு
Share your comments