டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக ரூ.1264 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 201.75 ஏக்கரில் அமைய உள்ளது. இங்கு 750 படுக்கைகள், 16 ஆபரேசன் தியேட்டர்கள், 18 ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரங்குகள் இந்த மருத்துவமனையில் அமைய உள்ளன. மேலும் 100 மாணவ- மாணவிகள் படிக்கும் மருத்துவக்கல்லூரி, 60 பேர் பயிலும் நர்சிங் கல்லூரி ஆகியவையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் 27.01.2019- ல் நடந்தது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு பகல் 11.28 மணிக்கு மதுரை வந்தார்.
அவரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் மண்டேலா நகர் விழா திடலுக்கு பிரதமர் மோடி சென்றார்.
அங்கு நடைபெற்ற விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். மேடைக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அத்துடன் மதுரை மீனாட்சியம்மன் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.
துணை-முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதே மேடையில் தலா ரூ.150 கோடி மதிப்பில் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, மத்திய மந்திரிகள் நட்டா, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
Share your comments