
வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் குறித்து மத்திய பட்ஜெட் 2025-26 இல் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளை திறம்பட செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் "விவசாயம் மற்றும் கிராமப்புற செழிப்பு" குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலைத்தள கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
2025-26 பட்ஜெட் அறிவிப்பைக் கருத்தில் கொண்டு வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட 10 கருப்பொருள் அமர்வுகள் குறித்த விவாதங்கள் கருத்தரங்கில் இடம்பெற்றிருந்தன.
வேளாண்மை – வளர்ச்சியில் தன்னிறைவு:
வேளாண்மை மற்றும் கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலைத்தள கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலைத்தள கருத்தரங்கில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதலாவது முழுமையான பட்ஜெட் என்றும், கொள்கைகளின் தொடர்ச்சியையும், வளர்ந்த பாரதம் தொலைநோக்கின் புதிய விரிவாக்கத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.
வேளாண் துறையில் திறன் மேம்பாடு, முதலீடு, தொழில்நுட்பம், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் மாநிலங்களுடன் இணைந்து பல்துறை விரிவான வேளாண் திட்டம் தொடங்கப்படும். முதல் கட்டமாக 100 மாவட்டங்களில் வேளாண் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்று இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதனை செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் இந்த கருத்தரங்கில் பேசப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை எவ்வாறு மேலும் சிறப்பானதாக மாற்றுவது என்பது குறித்து விவாதிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகள் மூலம் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வொருவரின் தீவிர பங்கேற்பும் கிராமங்களுக்கு அதிகாரம் அளித்து, கிராமப்புற குடும்பங்களை வளப்படுத்தும் என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் பட்ஜெட்டின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்ய இந்த வலைத்தள கருத்தரங்கம் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பட்ஜெட்டின் இலக்குகளை அடைய சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Read more:
பஞ்சாப் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி ரூ.7,050 கோடியாக அதிகரிப்பு
Share your comments