தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்க வலியுறுத்தி கடந்த மாதம் பிப்ரவரி 21 டெல்லியின் ஜந்தர் மந்தர் சாலையிலுள்ள கேரளா இல்லம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு ஆவுஸ் மற்றும் உச்ச நீதிமன்றம் வாயிலில் போராட்டம் நடைபெற்றது.
லண்டனைத் தலைமையிடமாக கொண்ட வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் 1997 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் காப்பர் உருக்காலையைத் தொடங்கி செயல்பட்டு வந்தது. இந்த ஆலைக்கு எதிராக பல கட்டமாக மக்கள் மற்றும் சட்டப்போராட்டங்கள் நடைப்பெற்று வந்தன. 2018 ஆம் ஆண்டு மே-22 ஆம் தேதி ஆலையை மூடக்கோரி நடைப்பெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய சூப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதற்கு பின் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் மே-26 ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆனால் இன்றளவிலும் ஒருதரப்பினர் ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியிறுத்தி வருகின்றனர். ஏனென்றால், இந்தியாவின் தாமிரத் தேவை மற்றும் ஏற்றுமதியில் 40% ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது. இந்த ஆலையில் நேரடியாக 5,000 பேரும், மறைமுகமாக 12,000 தொழிலாளர்களும் வேலைவாய்ப்பினை பெற்று வந்தனர். இதுதவிர ஒப்பந்த தொழிலாளர், லாரி ஓட்டுநர்கள் என பலருக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது. மேலும் காப்பர்த் தேவையினை பூர்த்தி செய்ய இந்தியா வெளிநாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தான், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம், எம்.ஏ.கே இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சார்பில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்க வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தர் சாலையிலுள்ள கேரளா இல்லம் அருகே பிப்ரவரி 21, 2023 போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 5 ஆண்டு போராட்டத்திற்கு பதில் வேண்டும் என கோரி டெல்லியில் உள்ள தமிழ்நாடு அவுஸ் மற்றும் உச்ச நீதிமன்றம் வாயிலில் போராட்டம் நடத்தினர். மேலும் அங்கு, பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் தங்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.
Sterlite Protest Pamphlet:
அதில் குறிப்பிடப்பட்டவை:
- 5 வருடங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்... சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம்
- காப்பர் தொழிற்சாலை ஒரு தேசிய சொத்து.
- இது எங்களுக்கு 22 ஆண்டுகள் வாழ்வாதாரத்தை அளித்தது.
- ஐந்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.
- தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையிலும், அதிக பணவீக்கத்திலும், இந்தியாவால் புதிய ஆலையை திறப்பதும், இறக்குமதி செய்வதும் மூடியாதது.
- தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த பூஜ்ஜிய திரவ வெளியேற்ற ஆலையை உறுதி செய்துள்ளது, அதன் சுற்றுச்சூழல் நடைமுறைகளுக்காக.
- லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.
- 100 விசாரணைகள் நடந்துள்ளன.
- ஆலை மூடப்பட்டதால், பல பெரிய மற்றும் சிறு வணிகங்கள் மூடப்படுகின்றன.
- அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- கோவிட் காலத்தில், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.
பிப்ரவரி 21, 2023 நடந்த போராட்டத்தின் போது தூத்துக்குடி மக்களின் கருத்து:
துளசி அறக்கட்டளை நிறுவனர், போராட்டம் குறித்து தெரிவித்தவை: தூத்துக்குடியை சுற்றி 278 மகளிர் குழுக்கள் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 3000 பெண்கள் வரை உள்ளனர். ஸ்டெர்லைட் சிஎஸ்ஆர் பண்ட் மூலம் சுமார் 1000 பெண்களுக்கு சுயத்தொழில் கற்றுக்கொடுத்து தொழில் முனைவராக மாற்றியுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது முதல் தற்போது வரை, பெண்களின் பொருளாதார முன்னேற்றம் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தால் தான் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி பிறக்கும். இது தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வழங்க முயன்றோம் . ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் தான் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என குறிப்பிட்டார்.
மேற்கொண்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணிக்கம் தெரிவிக்கையில் , ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்பது முற்றிலும்தவறான கருத்து. உலக நாடுகளில் காப்பர் உற்பத்தியில் முதன்மை நிறுவனமாக வளர்ச்சி அடைந்து வந்தது ஸ்டெர்லைட். வெளிநாட்டு சதியால்தான் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியா மீது பொருளாதார ரீதியான சர்வதேச தாக்குதல் (International economic terrorism ). இதனாலயே, சீனா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க:
TN வேளாண் பட்ஜெட் 2023 தமிழக இளைஞர்களுக்கு அளித்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?
தர்மபுரியில் இ-சேவை மையங்களைத் திறந்து நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு
Share your comments