வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தரமான மருத்துவ வசதி என்று இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
காப்பீடு வசதி இல்லை
கொரோனா மையங்களில், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், முத்துகண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் மருத்துவ வசதிகள் இருந்தும், கொரோனா (Corona) பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். நோய் தொற்று காலத்தில், அதிகமாக செலவு செய்ய முடியாதவர்களால், தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியவில்லை. அவர்களுக்கு காப்பீடு வசதியும் இல்லை.
இது குறித்து, விரிவான ஆய்வு தேவை. அரசு தரப்பிலும் தெளிவான கொள்கை வகுக்கப்பட வேண்டும். மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அரசு மருத்துவ மனைகளில் வழங்கப்படும் உணவும், விரும்பும் வகையில் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில், உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்குவதில், சந்தேகம் எழுவது வழக்கம். குறைவான தொகையை குறிப்பிட்டு ஒப்பந்தம் பெற்று, கலோரி (Calory) குறைந்த உணவு வழங்குவதும் நடக்கிறது. மருத்துவ வசதிகளை பொறுத்தவரை, சர்வதேச அளவிலான மாதிரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்காணிப்பு :
ஜெர்மனியில், அரசு கட்டுப்பாட்டிலான மருத்துவமனைகள் இல்லை. ஆனால், தனியார் அளிக்கும் மருத்துவ வசதிகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. வசதியானவர்களுக்கு மட்டுமே தரமான மருத்துவ வசதிகள் என்று இல்லாமல், சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, 30ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
மேலும் படிக்க
கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!
2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்
Share your comments