சம்பா மிளகாய் ஏற்றுமதி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் மிதமான அளவில் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
மிளகாய் ஏற்றுமதியை ஊக்குவிக்க இராமநாதபுரம் மாவட்டத்தில் சேமிப்பு கிடங்கு மற்றும் பதப்படுத்தும் வசதிகள் போன்றவற்றை மேம்படுத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் சம்பா, முண்டு என இருவகை மிளகாய் பயிரிடப்படுகிறது. சமீபத்தில் தான் முண்டு மிளகாய் ரகத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டு ஏற்றுமதி வாய்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
இதுக்குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் நாகராஜன் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக மிளகாய் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் சாதாரணமாக 14,000 ஹெக்டேர் என்கிற அளவில் மிளகாய் சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்பு பருவத்தில், 16,500 ஹெக்டேருக்கு மேல் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா மிளகாய் மற்றும் முண்டு மிளகாய் இரண்டும் ஆண்டு முழுவதும் சந்தையில் 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறினார்.
வேளாண் வணிகத்துறை சந்தைக்குழு செயலர் ராஜா கூறுகையில், "மாவட்டத்தில் ஆறுக்கும் மேற்பட்ட கிடங்குகளும், எட்டிவயல் பகுதியில் ஒரு குளிர்பதன கிடங்குகளும் உள்ளன. தற்போது 100 டன் மிளகாய் வரை கிடங்கில் சேமிக்கும் வசதி உள்ளது. ஆறு கிடங்குகளுக்கு நகராட்சி சேமிப்புக்கிடங்கின் அனுமதி பெற்ற நிலையில், எட்டிவயல் குளிர்பதன கிடங்கு மற்றும் பரமக்குடி கிடங்கு அனுமதிக்காக காத்திருக்கிறது” என்றார்.
மிளகாய் ஏற்றுமதியாளர் வி.ராமர் கூறுகையில், ”கமுதியில் உள்ள விவசாயிகள் 120 டன்களுக்கும் அதிகமான காய்ந்த சம்பா மிளகாயை அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.
சர்வதேச இறக்குமதியாளர்களிடம் முண்டு மிளகாய்க்கு வரவேற்பு உள்ளது. ஆனால் தற்போது காய்ந்த சம்பா மிளகாய்க்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது” என்றார்.
மேலும் கூறுகையில், “போதிய குளிர்பதன கிடங்கு வசதி இல்லாததால் சூரங்குடியில் உள்ள தனியார் குளிர்பதன கிடங்கில் விவசாயிகள் மிளகாயினை சேமித்து வருகின்றனர். அங்கு 5 டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது” என்றார்.
சர்வதேச சந்தைகளில் இராமநாதபுர மாவட்ட மிளகாய்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும் நிலையில், உரமற்ற இயற்கை முறையில் மிளகாய் சாகுபடியினை மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புவிசார் குறியீடு பெற்ற இராமநாதபுரம் முண்டு மிளகாய் உருவத்தில் சிறியதாகவும், உருண்டை வடிவிலும் காணப்படும். இவை அண்டை மாவட்டங்களான சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி,புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: sempulam
மேலும் காண்க:
Share your comments