நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக விடுதலை தின அமுதப்பெருவிழா என்ற தலைப்பில், நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு சார்பில் லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஹரியானா மாநிலத்தில் தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. கர்னல் மாவட்டத்தின் ஹெம்தா கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், 20 ரூபாய்க்கு தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அப்பகுதி மக்கள் கூறிய வீடியோ ஒன்றை பாஜக எம்.பி.வருண் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
ஏழைகளின் உணவைப் பறித்துத்தான் தேசியக் கொடிகளை விற்பனை செய்யவேண்டுமா எனவும் வருண் காந்தி காட்டமாக கேள்வி எழுப்பினார். அதனைதொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. பின்னர், தேசியக் கொடியை வாங்க மக்களை கட்டாயப்படுத்தியதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அக்கடையின் ரேஷன் விநியோக உரிமத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய ரேஷன் பொருட்கள் விநியோகஸ்தர், அரசு உத்தரவின்படியே தாங்கள் தேசியக் கொடியை விற்பனையை செய்ததாக கூறினார். ஆனால் இதனை மறுத்துள்ள ஹரியானா அரசு, மக்கள் விருப்பப்பட்டால் தான் தேசியக் கொடியை விற்பனை செய்யவேண்டும் என்று விளக்கமளித்துள்ளது.
மேலும் படிக்க:
திருமணம் ஆனவர்கள் ரூ.72,000 பென்சன் பெற முடியும், எப்படி தெரியுமா?
Share your comments