காலநிலை மாற்றத்தால் தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி நோய் (Red spider disease) தாக்கி வருகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை விவசாயம் (Tea Farming) செய்து வருகின்றனர். அவர்கள் பச்சை தேயிலையைப் பறித்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள்.
தேயிலை விவசாயம்
தேயிலை வாரியம் மற்றும் இன்கோசர்வ் நிர்ணயம் செய்யும் மாத சராசரி விலை, கிலோ அடிப்படையில் வழங்கப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஒரு கிலோ பச்சை தேயிலை ரூ.26, ரூ.28 விலை உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விலை குறைந்தது
கனமழையால் அசாமில் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது. அதனால் உள்நாட்டில் தேயிலை தூளின் தேவை அதிகரித்ததால், தொடர்ந்து 4 மாதங்கள் பச்சை தேயிலை விலை குறையாமல் இருந்தது. பின்னர் அசாமில் இயல்பு நிலை திரும்பியதால் நீலகிரியில் பச்சை தேயிலை விலை குறைய ஆரம்பித்தது.
நடப்பு மாதம் ஒரு கிலோ ரூ.19 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை குறைந்து வருவதால் தேயிலை செடிகள் பராமரிப்பு, தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவது, உரமிடுவது (Compost), தண்ணீர் பாய்ச்சுவது போன்ற செலவுகளை கவனிக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சரிவர மழை பெய்யாமல் காலநிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தேயிலை செடிகளை நோய் பாதித்து வருகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் இலைகள் காய்ந்த நிலையில் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. மஞ்சூர், எமரால்டு, இத்தலார் போன்ற பகுதிகளில் தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி நோய் (Red spider disease) தாக்கி உள்ளது. அதனால் விவசாயிகள் வழக்கமாக பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கும் அளவு குறைந்து உள்ளது.
மகசூல் பாதிப்பு
இந்த நோய் தாக்குதல் காரணமாக தேயிலை மகசூல் (Yield) பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பச்சை தேயிலையின் விலை குறைந்து வரும் நிலையில், நோய் தாக்கியதால் பச்சை தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சி மருந்து தெளித்தும், நோய் தாக்கிய செடிகளை வெட்டியும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தென்னையில் வாடல் நோய்! நோய் மேலாண்மை குறித்து வேளாண் அதிகாரி ஆலோசனை!
Share your comments