சென்னையில், ஏற்ற, இறக்கத்துடன், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில், மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வர, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், தினசரி கொரோனா பாதிப்பு, 170 முதல் 200 வரை என, ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. நேற்று, 185 பேர் பாதிக்கப்பட்டு, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 1,752 பேர் சிகிச்சைபெறுகின்றனர். தினசரி தொற்று, ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளில் மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில், காசிமேடு மீன் மார்க்கெட், தி.நகர் பகுதிகளில், சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இவை, மூன்றாம் அலை தொற்றுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் கட்டுப்பாடுகள்
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில், காசிமேடு மீன் மார்க்கெட் பகுதிகளில், சில்லரை வியாபாரத்துக்கு தடை விதிப்பது குறித்து, மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அதேபோல், தி.நகர் பகுதிகளில், அதிகளவில் மக்கள் கூடுவதால், தடுப்பு வேலிகளை அமைத்து, கட்டுப்பாடுகளை விதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகர நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது: சென்னையில் தினசரி, 22 ஆயிரம் முதல், 25 ஆயிரம் பேருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், ஏற்ற, இறக்கத்துடன் தான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடும்ப தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
ஒரு குடும்பத்தில், ஒருவர் பாதிக்கப்பட்டால், அக்குடும்பத்தில் மூன்று பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். எனவே, வெளியே செல்லும் போது, தங்கள் பாதுகாப்பை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும். சென்னையில், ஒரு தெருவில், மூன்று பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவை கட்டுப்பாடு பகுதியாக அடையாளம் காணப்படுகிறது. அதன்படி, 99 தெருக்கள் உள்ளன. தொற்று பாதிப்புக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க
Share your comments