1. செய்திகள்

அமலுக்கு வருகிறது அரிசி ATM- கூட்ட நெரிசலைத் தடுக்க புதிய யுக்தி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rice ATM coming soon
Credit: Vietnam times

பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின் வயிற்றுப்பசியைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே , நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், ரேஷன் கடைகள் மூலம் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.

குறிப்பாக பல மாநிலங்களில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பச்சரிசி, புழுங்கரிசி போன்றவை இலவசமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை மாதத்தின் 30 நாட்களும் வாங்க காலஅவகாசம் இருந்தாலும், பிறகு போனால் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாக, முந்தியடித்துக்கொண்டு வாங்க மக்கள் திரண்டுவிடுவது வழக்கம்.

இதனால் ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும். நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது. சில வேளைகளில், ரேஷன் கடைகளில் கையிருப்பு காலியாகும்போது, கால்கடுக்க நின்றும், அரிசியைப் பெறமுடியாமல் திரும்பிச் செல்லவும் நேர்கிறது.

Credit: The Economic Times

அரிசி ஏடிஎம்

குடும்ப அட்டைதாரர்களின் இந்த இன்னலைப் போக்குவதற்காகவே பணம் வழங்கும் ஏடிஎம் (ATM)போல, அரிசி அளிக்கும் ஏடிஎம்களை (ATM) அமைக்கக் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரிசி ஏடிஎம் மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கர்நாடக உணவுத்துறை அமைச்சர் கே. கோபாலய்யா தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியா, வியட்னாம் போன்ற நாடுகளில் கொரோனா நெருக்கடிக் காலத்தில், அரிசி ஏடிஎம்கள் பெருமளவில் கைகொடுத்திருப்பதால், அந்த யுக்தியைக் கையாளத் தங்கள் அரசும் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி ஏடிஎம்மின் சிறப்பு அம்சங்கள் (Features)

  • இந்த அரிசி ஏடிஎம் 24 மணி நேரமும் செயல்படும்.

  • சோதனை முயற்சியாக முதலில் 2 அரிசி ஏடிம் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வெற்றியடைந்தால், மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விஸ்தரிப்பு செய்யப்படும்.

  • நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.

  • வேலைக்குச் செல்லும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ரேஷன் கடைகளுக்குச் செல்ல முடியாததைக் கருத்தில்கொண்டே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

  • 100 முதல் 500 கிலோ அரிசியை சேமித்து வைக்கும் வகையில், பல்வேறு கொள்ளளவு கொண்ட ஏடிஎம் எந்திரங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.

  • ஏடிஎம்மில் பயன்படுத்த ஏதுவாக குடும்ப அட்டைகளை பையோமெட்ரிக் (biometric )சிப் பொருத்தப்பட்ட, ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் அரசு திட்டமிட்டுள்ளது.

  • மாநிலம் முழுவதும் கர்நாடக அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள, குடிநீர் ஏடிஎம்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

  • மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் வகையில் கர்நாடகா முழுவதும் 1800க்கும் மேற்பட்ட குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!

NDAP : தரிசை விவசாய நிலமாக மாற்றினால் ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியம்!

English Summary: Rice ATMs are coming into effect like foreigners - New tactic to prevent overcrowding in ration shops! Published on: 06 September 2020, 08:44 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.