இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்துமே எளிதாகி விட்டது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆபத்தும் மிக எளிதாக நம்மை நெருங்குகிறது. இதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அவசரத் தேவைக்காக சிலர் ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்குகின்றனர். ஆனால், அதில் அதிக ஆபத்து உள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிவிட்டு சிலர், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளவும் துணிகின்றனர். இந்நிலையில், கடன் வழங்கும் செயலிகள் மிகவும் ஆபத்தனவை என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
எச்சரிக்கை (Warning)
டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “சமீபகாலமாக கடன் வழங்கும் செயலிகள் அதிகரித்து வருகிறது. இந்த ஆன்லைன் கடன் செயலிகளில் கடன் பெற, உங்கள் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க சொல்வார்கள். உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்பு எண்களில் சிலரைப் பற்றிய தகவல்களை கேட்பார்கள். உங்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் முறையில் சித்தரித்து, உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி உங்களிடம் பணம் வசூலிப்பார்கள. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு, நிம்மதியை இழப்பீர்கள். இந்தப் புகைப்படம் உண்மை இல்லை என்றாலும், யாரும் இதை நம்பமாட்டார்கள்.
இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில், உங்களை சிக்க வைத்து பணம் வசூலிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு அதிகளவில் புகார்கள் வருகிறது. காவல்துறை மூலம் இந்த மோசடி செயலிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்ன தான் இந்த செயலிகளை நாங்கள் முடக்கினாலும், புதிய பெயர்களில் இந்த கடன் செயலிகள் வந்து கொண்டு தான் இருக்கும். பொதுமக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கடன் செயலிகள் (Loan Apps)
மக்கள் யாரும் ஏமாறக் கூடாது என்பதற்காக சில செயலிகளை சொல்கிறேன். Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan மற்றும் City cash ஆகிய செயலிகள் மோசடியான செயலிகள். இவற்றை ஒருபோதும் பதிவிறக்கம் செய்து விடாதீர்கள். ஒருவேளை உங்கள் போனில் இந்த செயலிகள் இருந்தால் உடனடியாக நீக்கி விடுங்கள். இனியாவது பாதுகாப்பாக இருங்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments