தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியில் இருந்து 3 ரூபாய் குறைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2021 - 2022 நிதியாண்டிற்கான சீரமைக்கப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை (Budget) தாக்கல் செய்தபோது அவர் இந்த விஷயத்தை முன்வைத்தார்.
முதல் முறையாக நிதி நிலை அறிக்கை காகிதமில்லாத(E-Budget) நிதி நிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இதற்கென அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது இருக்கையில் கம்யூட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நிதியமைச்சர் எழுந்த நின்ற போது அ.தி.மு.கவினர் தாங்கள் பேச வேண்டுமென குரல் எழுப்பி வந்தனர். இதனை பேரவைத் தலைவர் அப்பாவு ஏற்கவில்லை. இதையடுத்து அவர்கள் வெளிநடப்புச் செய்ய தொடங்கினர்.
இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்படுவது குறித்து ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் இன்று வரிகுறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 2.63 கோடி இரு சக்கர வாகனங்கள் தற்போது இயங்குகின்றன. பெட்ரோல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலையைக் குறைப்பதால் ரூ. 1,160 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பெட்ரோலின் அடிப்படை விலை, மத்திய அரசின் வரி போன்றவை மாறாத நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 3 ரூபாய் வரி குறைப்பு என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
மேலும் படிக்க:
Share your comments