சென்னை: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலூர், மாவட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவிகளையும் வழங்கினார். சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா ரூ.1000 வழங்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், பல ஏக்கரில் பயிர்களை மூழ்கடித்தும் பெரும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும், 4 ஆயிரத்து 655 விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 108 கால்நடைகள் உயிரிழந்துள்ளதோடு, 271 ஓட்டு வீடுகள் இடிந்துள்ளது, 231 குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும், கடலூர் மாவட்டம், கீழ்பூவாணிக்குப்பத்தில் வைத்திருந்த வெள்ள பாதிப்பு புகைப்படங்களை முதல்வர் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகள் பாதிப்பு பற்றி விளக்கி கூறினர். இதன் தொடர்ச்சியாக, கீழ்ப்பூவாணிக்குப்பம் கிராமத்தில் நடந்து சென்று நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் குறிஞ்சிப்பாடியில் கூரைவீடு சேதமடைந்த 10 பேருக்கு ரூ.41 ஆயிரம் நிவாரண உதவித் தொகையை வழங்கினார். இதை தொடர்ந்து சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை, பெராம்பட்டு, அக்கறை, ஜெயங்கொண்டப்பட்டினம், கீழக்குண்டலப்பாடி, வேலகுடி, உள்ளிட்ட இடங்களில் பாதிப்புகளை பார்வையிட்டு விவசாயிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். இதைத் தொடர்ந்து வல்லம்படுகையிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விவசாயிகளுக்கு ரூ.80,000 மானியம் - உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளவும்!
முதல்வர் அவர்களுடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு, சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள் சபா. ராஜேந்திரன், ஐயப்பன், சிந்தனைச்செல்வன், ராதாகிருஷ்ணன், மற்றும் வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார். நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments