வங்கி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சேமிப்பு கணக்கை பாதுகாப்பாக பராமரிக்கும் வழிகளை அறிந்திருப்பது அவசியம்.பல்வேறு வகையான நிதி மோசடிகளில், வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தை பறிக்கும் மோசடி ஒன்றாக இருக்கிறது. தொலைபேசி அல்லது ‘இ–மெயில்’ மூலம், உங்களின் தனிப்பட்ட விபரங்களை திரட்டி, அதன் வாயிலாக ஏமாற்றுவது உள்ளிட்ட பல வகையில் விஷமிகள் அப்பாவி வாடிக்கையாளர்களை பாதிப்புக்குள்ளாக்குகின்றனர். மேலும், ‘பாஸ்வேர்டு’ திருட்டு, கார்டு விபரங்களை களவாடுவது, காசோலை மோசடி போன்ற வழிகளிலும் மோசடிகள் நடைபெறுகின்றன.
விழிப்புணர்வு (Awareness)
மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு அவசியம். வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுபவர்கள் அடையாளத்திருட்டு எனும் உத்தியை பரவலாக பயன்படுகின்றனர். ஒருவரது தனிப்பட்ட விபரங்களை தெரிந்து, அவற்றை வைத்து அவரை போல செயல்பட்டு பணத்தை திருடுவதாக இந்த உத்தி அமைகிறது.
பாஸ்வேர்ட் (Password)
இதற்காக, வங்கியில் இருந்து அதிகாரி பேசுவது போல பேசி, வங்கி கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, அவற்றைக் கொண்டு மோசடி செய்யும் போக்கு அண்மையில் அதிகரித்திருக்கிறது. குறிப்பிட்ட நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டுவிடும் என்பது போல அச்சுறுத்தி, தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சிக்கின்றனர். வங்கி கணக்கு தொடர்பான தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது போன்ற தகவல்களை ஒருபோதும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தொலைபேசி மூலம் கேட்பதில்லை என, வங்கிகள் தரப்பில் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக நிதி பரிவர்த்தனைக்கான ரகசிய எண்கள் மற்றும் ஒரு முறை பாஸ்வேர்டை எந்த காரணம் கொண்டும் வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது போலவே, இணைய வங்கிச்சேவையை பயன்படுத்துபவர்கள், தங்கள் பாஸ்வேர்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் மற்றவர்கள் எளிதில் கணிக்க முடியாத வகையில் வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.
வங்கி வழிகாட்டுதல் (Bank Guidelines)
மோசடிகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வங்கிகள் தரப்பில், குறுஞ்செய்தி உள்ளிட்ட வழிகளில் வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவது அவசியம். தனிப்பட்ட தகவல்களை கேட்பதில்லை என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இவ்விதம் தெளிவுபடுத்தப்படுகின்றன.
அதே போல, வங்கிகள் அனுப்பி வைக்கும் சேமிப்பு கணக்கு அறிக்கை உள்ளிட்ட தகவல்களை கவனமாக பார்வையிட வேண்டும். குறுஞ்செய்திகள் வாயிலாக பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களையும் வங்கிகள் அனுப்பி வைக்கின்றன. வங்கி கணக்கு தவறாக கையாளப்பட்டிருந்தால், இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற நேரங்களில் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கு ‘ஆன்லைன்’ வசதியை பயன்படுத்துவது அதிகரித்திருந்தாலும், பொது கம்ப்யூட்டர்களில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், பாஸ்வேர்டு போன்றவற்றை விஷமிகள் களவாடும் அபாயம் இருக்கிறது. காசோலை விஷயத்திலும் இதே போன்ற கவனம் அவசியம். காசோலை புத்தகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். காசோலையை ‘கிராஸ்’ செய்யாமல் யாரிடமும் கொடுக்கக் கூடாது. காசோலையை அடையாளத்திற்காக சமர்ப்பிக்க தேவை இருந்தால், அதை முறையாக ‘கேன்செல்’ செய்த பிறகே சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments