சாலை விபத்தில் சிக்குவோருக்கு, தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி அவசர சிகிச்சை (Free Treatment) அளிக்க வகை செய்யும், 'இன்னுயிர் காப்போம்' என்ற அரசின் புதிய மருத்துவ திட்டத்தை, மேல்மருவத்துாரில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கவும், விபத்து ஏற்பட்ட 48 நேரத்திற்கு கட்டணமில்லாத சிகிச்சை அளிக்கும் வகையிலும், 'இன்னுயிர் காப்போம்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இன்னுயிர் காப்போம் (Save the Life Sceme)
இதன் துவக்க விழா, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. அமைச்சர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திட்டத்தை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க பாடுபட்டு இருக்கிறோம். அதே நேரம், வறுமை, பசி, குற்றங்கள், சாலை விபத்துகள் நடப்பதில் குறைந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். ஆனால், சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாக தமிழகம் இருப்பதும், இறப்போரில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதும் நமக்கு மிகுந்த வருத்தம் தருகிறது.
இலவச அவரச மருத்துவ சிகிச்சை (Free Emergency Treatment)
சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு களை குறைத்து, சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில், அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மிக முக்கியமான ஒரு அம்சமாக, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில், முதல் 48 மணி நேரத்திற்கான அவரச மருத்துவ சிகிச்சை செலவை, அரசே ஏற்றுக் கொள்ளும்.
இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட, 201 அரசு மருத்துவமனைகள்; 408 தனியார் மருத்துவ மனைகள் என, மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப் பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள். பிற மாநிலத்தவர், வேறு நாட்டவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும், தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர் அனைவருக்கும், முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். அரசின் மிக முக்கியமான நோக்கம் விபத்தே இருக்கக்கூடாது என்பதுதான்.
ஹெல்மெட் கட்டாயம் (Helmet Must)
விபத்துக்கு மிக முக்கியமான காரணம் அதிகப்படியான வேகம் தான். சாலைகளில் வாகனத்தை ஓட்டும்போது, வேகத்தைக் குறையுங்கள். வேகத்தை உங்களது உழைப்பில் செயல்படுத்துங்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும். கார்களில் பயணம் செய்யும் போது, 'சீட் பெல்ட்' அணிய வேண்டும். சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விபத்து இல்லாத தமிழகத்தை நிச்சயமாக உறுதியாக அமைப்போம்.
மேலும் படிக்க
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் ரூ.5,000 பரிசு!
ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அதிர்ஷ்டம்: லாட்டரியில் ஒரு கோடி பரிசு!
Share your comments