புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் குறையை தீர்த்த ஆவண செய்யப்படும் என்றும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அரசு எப்பொழுதும் தயார்நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை மீதான எம்.பிக்கள் கருத்துகளுக்கு மாநிலங்கள் அவையில் பதிலளித்து பிரதமர் மோடி பேசினார்.
பயிர் காப்பீடு - ரூ.16,000 கோடி ஒதுக்கீடு
அப்போது, 2014-ம் ஆண்டு முதலே விவசாயிகளின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஏற்றதாக பயிர் காப்பீட்டுத் திட்டம் மாற்றப்பட்டது. வரும் நிதியாண்டிற்கு மட்டும் சுமார் 16,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
குறைந்த பட்ச ஆதரவு விலை தொடரும்
பிரதமர் கிசான் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. சிறு குறு விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
பேச்சுவார்த்தைக்கு தயார்
புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானதே தவிர, எதிரானது அல்ல. இந்த சட்டங்கள் குறித்து புரிதல் ஏற்படுத்த விவசாய சங்க தலைவர்களுடன் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார். இந்த சபையின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு போராடும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். எனது தலைமையிலான அரசு எப்பொழுதும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது என்றார். அனைவரும் இணைந்து கூட்டாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம். மண்டிகள் முறை தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மேலும் படிக்க....
Share your comments