6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வினை ரத்து செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதத் தொடக்கத்தில் திறப்பது எப்போதும் வழக்கம். அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் பள்ளி திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்ப்பாராத வகையில் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வந்தன. இதனையடுத்து வகுப்புகள் வருகிற ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட தேதி வரைக்குமே வெப்பநிலையானது இன்னும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையினை அடுத்து, மீண்டும் பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களை வரவேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்:
இன்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகைத்தந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளை வரவேற்று பாடப்புத்தகங்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு-
உடற்கல்வியை தனிப்பாடமாக கொண்டு வருவது குறித்து 15-ம் தேதி நடைபெறும் துறை சார்ந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். தமிழ்நாடு அரசின் நிதி நிலை சரியானதும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும். மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கப்படும் வரை, பள்ளி சீருடையில் வந்தால் இலவச பேருந்து சேவையை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள இயலும் என தெரிவித்துள்ளார்.
நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் இணைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 1.31 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்துள்ளனர். நடப்பாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வினை ரத்து செய்வது குறித்த கேள்விக்கு, அதுத்தொடர்பான எண்ணம் எதுவும் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
முன்னதாக திட்டமிட்ட நாளில் பள்ளிகள் தொடங்க இயலாத நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy : anbil magesh( Twitter)
மேலும் காண்க:
கால்நடை மருத்துவ படிப்பிற்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கை- முழுவிவரம்!
Share your comments