மாநில வேளாண்மைத் துறையால் நிர்வகிக்கப்படும் 'உழவன் செயலி'-யில் பெரம்பலூர் மாவட்டத்தில் விதை இருப்பு மற்றும் அதன் விலை குறித்த தகவல்கள் நீண்ட நாட்களாக பதிவேற்றப்படாமல் காலியாக உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் தொழில் வளர்ச்சி அடிப்படையில் ஒரு பின்தங்கிய மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இதனிடையே, தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு, விவசாயம் தொடர்பான தரவுகள், அறிவிப்புகள், திட்டங்களை உடனடியாக வழங்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு உழவன் செயலி என்கிற மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.
மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், நெல் மற்றும் கரும்பு ஆகியவை பெரம்பலூரில் அதிக சாகுபடி செய்யப்படும் நிலையில் பயிர்களுக்கான சந்தை கொள்முதல் விகிதம் குறித்த தகவல்கள் உழவன் செயலியில் இல்லாததால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது அரசின் மானியம் குறித்த விவரங்கள் மட்டுமே செயலியில் பயனுள்ள வகையில் இருப்பதாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர்களுக்கான சந்தை விலை, விதை இருப்பு மற்றும் அதன் விலை, நீர்த்தேக்க அளவுகள் உள்ளிட்ட தகவல்கள் இல்லை எனவும் அதனை உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரளியைச் சேர்ந்த விவசாயி கே.மருதப்பிள்ளை கூறுகையில், “ உழவன் செயலி ஆப் உருவாக்கப்பட்டதன் நோக்கம், விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குவது தான். ஆனால் தற்போது கேட்ட தகவல்களில் பாதி கிடைக்கவில்லை. விதைகள் மற்றும் பயிர்களின் கிடைக்கும் தன்மை மற்றும் விலை நிர்ணயம் குறித்த பகுதி காலியாகவே உள்ளது. விதைப் பண்ணைகளில், விதைகள் கிடைக்கவில்லை, அவற்றின் கிடைக்கும் தன்மை மற்றும் விலைகள் ஆகியவை செயலியில் பட்டியலிடப்பட வேண்டும். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் குறித்த தகவல் பற்றாக்குறையையும் அவர் சுட்டிக்காட்டினார்.”
குரும்பபாளையத்தை சேர்ந்த மற்றொரு விவசாயி டி.துரை கூறுகையில், சந்தை விலை தெரியாததால் இங்கு என்ன பயிரிடுவது என விவசாயிகளுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. அதிகாரிகளும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. இதனால், தனியார் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். அதிக விலைக்கு விற்கும் முன், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர் என்றார்.
இதுகுறித்து விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் தொடர்பான தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை இயக்குநர் (பெரம்பலூர்) சங்கர் எஸ் நாராயணனைத் தொடர்பு கொண்ட போது, “விதைகள் தொடர்பான தகவல்கள் செயலியில் உள்ளன. இருப்பினும், விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப அனைத்து தகவல்களையும் பதிவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்”.
மேலும் காண்க:
நஷ்டத்தில் தவித்த தக்காளி விவசாயிகள்- கைக்கொடுத்து உதவிய e-NAM திட்டம்
Share your comments