சென்னை தீவுத்திடலில் மாநில அளவிலான உணவுத் திருவிழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் வருகிற ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகளில் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.
உணவுத்திருவிழா (Food Festival)
உணவுத்திருவிழாவுக்கு ‘சிங்கார சென்னையின் உணவு திருவிழா 2022’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திருவிழாவில் திரைக் கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்தத் திருவிழாவில் பாரம்பரிய உணவுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக 150 அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், சமையல் கலைகள் பற்றிய விரிவான பரிந்துரைகள், பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்தப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற உள்ளது.
குறிப்பாக, 1200 குழந்தைகளுக்கு அடுப்பில்லாமல் எவ்வாறு சமைப்பது என்பதை கற்றுக்கொடுத்தல், எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படிப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்ளக்கூடாது, உணவு வீணாவதை எப்படி தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்த நிகழ்வாக இந்த உணவு திருவிழா நடைபெற உள்ளது.
மேலும், உணவுத் திருவிழாவின் இறுதி நாளான ஆகஸ்ட் 14-ம் தேதி உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments