கால் டாக்சி டிரைவர், உணவு விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட, 400 வகையான பணியாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு திட்டம் (Social Security scheme)
ராஜ்யசபாவில், பா.ம.க., - எம்.பி., அன்புமணி கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அமைச்சர் அளித்துள்ள பதில்: கால் டாக்சி ஓட்டுனர், உணவு விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட, 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பணியின் போது உயிரிழப்பு, ஊனம் ஏற்படுதல் ஆகியவற்றுக்கு இழப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவம், மகப்பேறு பயன்கள், முதுமைக்கால பாதுகாப்பு போன்ற விஷயங்களில், பொருத்தமான சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வகுக்க, 2020-ம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகள் வகை செய்கின்றன.
இதற்காக, சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தவும், இந்த விதிகள் வகை செய்கின்றன. இத்தகைய தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள், அவற்றின் ஆண்டு வருமானத்தில், 1 முதல் 2 சதவீத தொகையை, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அளிக்க வேண்டும்.
தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்கள், அவர்களை பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ளவும், அவர்களை பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்கவும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments