திருநெல்வேலி மாநகராட்சியில், தாமிரபரணி ஆறு (Tamirabarani River), பாய்ந்து செல்லும் பகுதிகளில், கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கரைகளில் தற்காலிகமாக கழிவுநீர்த் தொட்டிகள் (Sewage Tank) அமைக்கப்படுகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் கண்ணன் (Kannan) ஆய்வு செய்தார்.
ஆற்றில் கழிவுநீர் கலத்தல்:
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடியிருப்புகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் இருந்து கழிவுநீர் (Sewage Water) வெளியேறி, தாமிரபரணியில் கலக்கும் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. மாநகரில் 3 கட்டங்களாக, பாதாள சாக்கடைத் திட்டம் (Sewage Project) செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்பதால், சாக்கடைகளும், கழிவுநீரும் கால்வாய்கள் (Canals) வழியாக, தாமிரபரணி கரைக்கு சென்று சேருகிறது. இதனால், தாமிரபரணி ஆறு அசுத்தமடைகிறது. குறிப்பாக கொக்கிரகுளம், கைலாசபுரம், கருப்பந்துறை, வண்ணார்பேட்டை பகுதிகளில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது குறித்து, மாநகராட்சிக்கு (Corporation), புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
தற்காலிக கழிவுநீர்த் தொட்டித் திட்டம்:
கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, தற்காலிகத் தீர்வாக தாமிரபரணி கரைகளில், கழிவுநீர்த் தொட்டி அமைத்து, அவற்றில் ஜல்லி கற்களை நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததையடுத்து, பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அமைக்கப்படும் கழிவுநீர் தொட்டிகளுக்குள் சேகரமாகும் கழிவுநீர், ஆற்றின் கரைகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு சென்று சேரும் வகையில், கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. கொக்கிரகுளத்தில் இத்திட்ட செயல்பாட்டை மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆய்வு செய்தார். கழிவு நீரில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேருவதால், கழிவுநீர் தொட்டிகளில் கழிவுநீர் வழிந்தோடி வரும் பகுதியில், இரும்பு கம்பிகளால் ஜல்லடை அமைக்க அதிகாரிகளுக்கு, ஆணையர் அறிவுறுத்தினார். ஆய்வுப் பணியின்போது, மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர் (Bhaskar), உதவி பொறியாளர் பைஜு (Baiju) உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போதுதான், தாமிரபரணியில் கழிவுநீர் வந்து சேருவதை தடுக்க முடியும். அதற்கு முன், மாற்று ஏற்பாடாக கழிவுநீர் தொட்டிகளில், கழிவுநீரை சேகரித்து பயனுள்ள வகையில் பயன்படுத்தும் திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்தியிருக்கிறது.
பாதாள சாக்கடைத் திட்டம்:
தற்காலிக கழிவுநீர்த் தொட்டி அமைக்கும் திட்டம், நல்லத் திட்டம் தான் என்றாலும், நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் (Drinking Water) பேருதவியாக இருக்கும் தாமிரபரணி ஆற்றைக் காக்க வேண்டியது அவசியம். அதனால், விரைந்து பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றி, தாமிரபரணி ஆறு மாசுபடுதலை தவிர்க்க வேண்டும் என, திருநெல்வேலி மாநகராட்சி மக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
உபரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழுமம் தகவல்!
அடையாறு ஆற்றை அகலப்படுத்த, பொதுப்பணித்துறை மும்முரம்! சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
கோவில்பட்டியில் மழை இல்லாததால் கருகும் பயிர்கள்! பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றிவரும் விவசாயிகள்! கைகொடுக்குமா அரசு!
Share your comments