கொரோனா ஊரடங்கால் பாதித்த தனிநபர், தொழில்துறையினர் மேம்பாட்டுக்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சிறப்பு கடன் திட்டங்களையும், கடன் மறுசீரமைப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, கூட்டுறவு சங்கங்கள், கிராம வங்கிகள், நுண் கடன் நிறுவனங்கள் மூலம், முறையாக கடன் திருப்பி செலுத்தியவர்கள் பயன்பெறலாம்.
அவசரகால கடன்
தொழில்துறையினர் மேம்பாட்டுக்காக, அவசரகால கடன் (Emergency Loan) உத்தரவாத திட்டத்தில், 2020 பிப்ரவரி மாத நிலவரப்படி, நிலுவை கடனில், 20 சதவீதம், மறு கடனாக வழங்கப்பட்டது. இந்தாண்டு, 10 சதவீதம் உயர்த்தி, கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் வழங்கப்படும். இத்திட்டத்தில், ஐந்து முதல் ஏழு வருட தவணையில், கடனை நீட்டிக்கலாம். தவணை தொகையை (Installment Amount) திரும்ப செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் பெறலாம். வரும், செப்டம்பர் மாதம் வரை, இச்சலுகை வங்கிகளில் வழங்கப்படுமென, அரசு அறிவித்துள்ளது.
முன்னுரிமை கடன்
சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் சேவை மேம்பாட்டுக்காக, முன்னுரிமை கடன் வழங்கப்படும். ஆக்சிஜன் செறிவூட்டி, வென்டிலேட்டர் தயாரிப்பு, கொரோனா மருந்து தயாரிப்பு (Corona Vaccine Production), முககவசம் (Facemask), முழு உடல் கவச உடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு, 50 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். எவ்வித பிணையமும் இல்லாமல், இரண்டு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
வீட்டுக்கடன், நுகர்வோர் கடன், வாகன கடன், கல்விக்கடன் (Educational Loan) மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றுக்கு தவணை செலுத்துவதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் பாதித்த வாடிக்கையாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, வங்கி விதிமுறைப்படி, குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படும். தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு, இதுதொடர்பான கடன் சலுகையை விரைந்து வழங்க வேண்டுமென, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
புதிய கடன் வழங்குவதுடன், கடன் மறுசீரமைப்பும் செய்யப்பட வேண்டும். ஊரடங்கு (Curfew) காலத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கடந்த ஆண்டை போலவே கடன் வழங்க வேண்டும். 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்கள், கடன் வசூலில் கணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்துமீறி செயல்படுவதாக, ஆதாரத்துடன் புகார் வரப்பெற்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடன் திட்டம், கடன் மறுசீரமைப்பு தொடர்பான உதவிக்கு, மாவட்ட முன்னோடி வங்கியை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க
மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!
வேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்!
Share your comments