பணியிடங்களில் உள்ள சூழ்நிலையால் கடும் மன அழுத்தத்தை இளம் தலைமுறையினர் அனுபவித்து வருவது நாளடைவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தங்களின் மன அழுத்தத்திலிருந்து விடுபட டெஸ்க்டாப்பில் வாழைப்பழங்களை வளர்க்கும் போக்கு சீனாவில் அதிகரித்து வருவதோடு, உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. அதன் பின்னணி கதையை இப்பகுதியில் காணலாம்.
சீனாவில் வாரத்திற்கு சராசரி வேலை நேரம் என்பது பெரும்பாலும் 49 மணிநேரத்தை தாண்டுகிறது. கடும் பணிச்சூழலால் உண்டாகும் மன அழுத்தத்தைக் குறைக்க இளம் தொழிலாளர்கள் புதுமையான வழிகளைத் தொடர்ந்து தேடிவருகின்றனர். அந்த வழிகளில் ஒன்று தான் தற்போது ஹிட் அடித்துள்ளது. அது என்னவென்றால், தான் அமர்ந்திருக்கும் மேஜையிலேயே வாழைப்பழத்தை வளர்ப்பது தான்.
பதட்டத்தை நிறுத்து: இது தான் காரணமா?
இந்தப் போக்குக்கு “stop banana green”அல்லது சீனாவின் மாண்டரின் மொழியில் ”டிங் ஜி ஜியாவோ லு” என விசித்திரமாக பெயரிட்டுள்ளார்கள். இதன் அடிப்படை பொருள் "பதட்டத்தை நிறுத்து" என்பது தான். சீனாவின் புகழ்பெற்ற சமூக வலைத்தளம் மற்றும் இ-காமர்ஸ் தளமாக கருதப்படும் Xiaohongshu-ல் இந்த வாழைப்பழம் வளர்ப்பு யோசனை வைரலாகியுள்ளது.
செயல்முறை எப்படி?
வாழைப்பழத்தை டெஸ்க்டாப்பில் வளர்க்கும் இந்த போக்கின் செயல்முறை மிக எளிதான ஒன்று தான். சீனாவில் உள்ள தொழிலாளர்கள், பச்சை வாழைப்பழங்களை அவற்றின் தண்டுகளுடன் அப்படியே வாங்கி தங்கள் மேசைகளில் ஒரு தண்ணீர் குவளைகளில் வைக்கின்றனர். சுமார் ஒரு வாரம் கவனமாக வளர்த்த பிறகு, வாழைப்பழங்கள் பழுத்து சாப்பிட தயாராக இருக்கும். பச்சை நிறத்தில் இருந்து தங்க மஞ்சள் நிறமாக படிப்படியாக மாறும் செயல்முறையானது தொழிலாளர்களின் கண்ணெதிரே நடப்பதால் அவை மனதளவில் ஒரு மாற்றத்தை உண்டாக்குவதாக அங்குள்ள தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலாளர் , "பசுமை நிறத்தில் இருந்து தங்க மஞ்சள் நிறமாக மாறும் வரை, ஒவ்வொரு கணமும் முடிவில்லாத நம்பிக்கை மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கிறது" என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் "கவலையை சாப்பிடுங்கள், உங்கள் பிரச்சனைகள் மறைந்து போகட்டும்” என பஞ்ச் டையலாக்கினையும் பறக்க விட்டுள்ளார்.
சக்கைப்போடு போடும் விற்பனை:
அவ்வாறு பழுக்க வைக்கும் வாழைப்பழங்களை சக ஊழியர்களிடையே பகிர்ந்துகொள்வது தோழமை உணர்வினை அதிகரிப்பதாகவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அலுவலகத்தில் வேலை செய்யும் சில ஊழியர்கள், பச்சை நிற வாழைப்பழங்களில் தங்கள் பெயர்களை எழுதி மஞ்சள் நிறமாக மாறும் போது இது எனக்கு தான் தர வேண்டும் என முன்பதிவும் செய்து வைக்கிறார்கள். இது ஊழியர்களிடையே நட்புறவினை வலுவாக மாற்றுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
அலிபாபா குழுமத்தால் இயக்கப்படும் இ-காமர்ஸ் நிறுவனமான Taobao-ல் வாழைப்பழத்துடன் கூடிய தண்டு விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரிடம் மட்டும் சுமார் 20,000 வாழை கொத்துகள் விற்பனையாகியுள்ளது.
Read also: Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
சரிவிலுள்ள வாழைப்பழ விற்பனையினை அதிகரிக்க வாழை விவசாயிகள் இந்தப் போக்கினை உண்டாக்கியிருக்கலாம் எனவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். "இந்த ஆண்டு வாழைப்பழங்கள் நன்றாக விற்பனையாகவில்லையா? இந்த வகை வாழைப்பழங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை விளம்பரப்படுத்தப்படுவதை நான் பார்த்திருக்கிறேன், மேலும் அவை நேரடி வாழைப்பழங்களாக வாங்குவதை விட விலை அதிகம்" என்று Xiaohongshu சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
எது எப்படியோ? இந்த விநோதமான போக்கு ரசிக்கும் வகையில் உள்ளது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். மரத்தை கட்டிப்பிடிப்பது, 20 நிமிடம் பூங்காவில் நடப்பது போன்றவை கடந்த ஆண்டு சீன இளைஞர்களிடையே ஒரு பிரபலமான மன அழுத்த நிவாரண நடவடிக்கையாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை- ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தின் சிறப்பம்சம்!
பூசா பாஸ்மதி 1979- பூசா பாஸ்மதி 1985 அரிசி வகைகளின் விதை விற்பனை தொடக்கம்!
Share your comments