விவசாயத்துறையில் முன்னேற்றம் அடையவும், அதிக பலன்களை கொண்டு வரவும் விவசாயத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டுள்ளார்.
சவுத்ரி சரண் சிங் தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (CCS-NIAM) வேளாண் வணிக மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர், விவசாயத் துறையின் மேம்பாட்டிற்காக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றார்.
“விவசாய உற்பத்தி இல்லையென்றால் அனைத்தும் நின்றுவிடும். இந்தத் துறையில் பல சவால்கள் உள்ளன, மத்திய அரசு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாநிலங்களின் ஒத்துழைப்போடு அதைத் தீர்க்க வெற்றிகரமாக முன்னேறி வருகிறது”.
லாபகரமான பயிர்களை நோக்கி நகர்தல், பயிர்களை பல்வகைப்படுத்துதல், விளைபொருள் விற்பனையில் இடைத்தரகர்களை ஒழித்தல் போன்ற பல சவால்கள் திட்டமிட்ட முறையில் கையாளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் “விஞ்ஞானிகள் இத்துறையில் நிறைய வேலைகளைச் செய்துள்ளனர். விவசாயிகளின் அயராத உழைப்புடன், அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான நட்புக் கொள்கைகளாலும் வரலாறு காணாத முன்னேற்றம் இத்துறையில் ஏற்பட்டுள்ளது" என்றார்.
பெரும்பாலான விவசாய விளைபொருட்களின் உற்பத்தி அடிப்படையில் இந்தியா உலகில் ஒன்று அல்லது இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், எதிர்க்காலத்தில் அனைத்து விளைபொருட்களின் உற்பத்தியில் முதன்மையாக விளங்குவதை நோக்கமாக கொள்ள வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவிடமிருந்து உணவு தானியங்கள் பெற்று வருகின்றன. அவர்களின் தேவையையும் நாம் நிறைவேற்றி வருகிறோம், எதிர்காலத்திலும் அதை தொடர்ந்து செய்வோம்.
விவசாய ஆராய்ச்சி என்பது தொடர்ச்சியான பணியாகும், அதே சமயம் விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளில் எந்த குறையும் இல்லை. அதே நேரத்தில் நாட்டின் மக்கள்தொகையில் 56 சதவீதம் பேர் இத்துறையை நம்பியிருப்பதால் விவசாயத்துறையினை மேம்படுத்துவதும் அவசியம் என்று அமைச்சர் தோமர் தன் உரையில் குறிப்பிட்டார்.
பின்னர் பட்டமளிப்பு விழாவில், முதுகலை டிப்ளமோ-வேளாண் வணிக மேலாண்மை மாணவர்களுக்கு பட்டயங்களையும், சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்களையும் ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கினார். NIAM ஆல் பயிற்சியளிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களின் தயாரிப்புகளையும் தொடங்கி வைத்து மற்றும் மானியங்களுக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், NIAM-யின் கூட்டாளர் நிறுவனங்களுக்கு தொடக்கப் பயிற்சி மற்றும் நிதியுதவியில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன. ஜாப்னர் பகுதியில் அமைந்துள்ள கரண் நரேந்திர வேளாண் பல்கலைக்கழகத்திற்கு பிளாட்டினம் விருதும், ஒடிசா மாநிலம் கட்டாகில் இயங்கி வரும் தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வைர விருதும், சபோரில் அமைந்துள்ள பீகார் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு தங்க விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மேலும் படிக்க:
நெற்பயிரை தாக்கும் துங்ரோ, பிரவுன் ஸ்பாட் நோய்களுக்கு என்ன தீர்வு?
உலகை அச்சுறுத்த காத்திருக்கும் பறவை காய்ச்சல் -விலங்குகள் நல நிபுணர்கள் எச்சரிக்கை
Share your comments