பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பானை மற்றும் கரும்பும் தான். கிராமங்கள் மட்டுமின்றி நகர்புறங்களிலும் பொங்கல் பண்டிகையின போது பன்னீர் கரும்புகள் வைத்து படைப்பது வழக்கம். சில ஆண்டுகளாக அரசு, ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதில், பன்னீர் கரும்பு துண்டு இரண்டு அடி அளவில் வழங்கி வருகிறது. இதற்காக கூட்டுறவு சொசைட்டி மூலம் அரசு நிர்ணயம் செய்யும் விலைகளுக்கு ஏற்ப விவசாயிகளிடம் இருந்து ஆண்டுதோறும் கரும்பு கொள்முதல் செய்யப்படும்.
பன்னீர் கரும்பு சாகுபடி (Sugarcane Cultivation)
கூட்டுறவு சொசைட்டிக்கு போக, மீதமுள்ள கரும்புகளை விவசாயிகள், திருவண்ணாமலை, சென்னை, ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். 10 மாதங்களில் விளையக்கூடிய இந்த பன்னீர் கரும்பு சாகுபடிக்கு, ஒரு ஏக்கருக்கு 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
விவசாயிகள் சிரமப்பட்டு சாகுபடி செய்யப்படும் பன்னீர் கரும்பு, கடந்த 2 ஆண்டுகளாக கூட்டுறவு சொசைட்டி மூலம் அரசு கரும்பு ஒன்றுக்கு 10 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 17 ரூபாய் வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்து வழங்கியது. இந்தாண்டு, கடந்தாண்டுகளை விட கூடுதலாக விவசாயிகள் செலவு செய்துள்ளனர். இதனால் கரும்புக்கு அதிகபட்சமாக 20 முதல் 25 ரூபாய் வரை விலையை அரசிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இது குறித்து, பிடாகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி அண்ணாதுரை கூறுகையில், 'பிடாகம் கிராம பகுதியில் 75 ஏக்கர் பரப்பளவில் இந்தாண்டு விவசாயிகள் பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதால் ஒரு ஏக்கருக்கு ஒரு கட்டுக்கு 20 கரும்புகள் வீதம், 1,500 கரும்பு கட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நியாயமான விலை (Perfect Price)
இந்தாண்டு, உரம் விலை, கூலி, வாகன வாடகை என அனைத்தும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு ஒரு ஏக்கருக்கு கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவை கருத்தில் கொண்டு அரசு பன்னீர் கரும்புக்கு நியாயமான விலையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.
வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதிக்கு மேல், கூட்டுறவு சொசைட்டி மற்றும் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
வேளாண் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது விவசாய முகத்தையே மாற்றும்: ஆய்வறிக்கையில் தகவல்!
Share your comments