பழநி பகுதியில் தொடர் கோடை மழையால், வயல்களில் உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து கண்மாய்களில் தேக்கும் தண்ணீரை நம்பியே விவசாய தொழில் உள்ளது.
கோடை மழை (Summer Rain)
கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கோடை விவசாயத்திற்கு தயாராகி உள்ளனர். பழநி அருகே பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, பெருமாள்புதூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் வயல்களில் உழவுப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டிராக்டர்கள் மற்றும் மாடுகள் மூலம் உழவுப்பணி நடந்து வருகிறது. கோடை மழை பெய்ய துவங்கியதைத் தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொப்பம்பட்டி வட்டார வேளாண் அலுவலர் காளிமுத்து கூறியதாவது: கோடை மழை பெய்ய துவங்கி உள்ளதால், தங்களது விவசாய நிலங்களில் சரிவிற்கு குறுக்கே கோடைஉழவு மேற்கொள்ள வேண்டும்.
இதனால், நிலத்தில் இருக்கும் புழு, பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் மற்றும் நோய்க்காரணிகள் மேலே வந்து சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அழிக்கப்படுகிறது. மேலும், வரும் காலங்களில் பெய்யும் மழைநீர், நிலத்தினுள் சென்று நிலத்தடி நீர் உயர வாய்ப்பாகும். மேலும், பயிர் மகசூல் அதிகரிக்க உதவும். கோடை உழவினால் மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்பட்டு மண் வளம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க
Share your comments