Credit : Daily thanthi
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை வரும் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக வெளி மாநில தொழிலாளர்களும் அடங்குவர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வெளி மாநில தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்திவருகிறது. இதில் சில முக்கிய உத்தரவுகளைப் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்
இதன்படி, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை இதுவரை அமல்படுத்தாத மாநிலங்கள், அதனை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெறமுடியுமோ, அவற்றை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும்.
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும் மாநிலங்களின் தேவைக்கேற்ப புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவு தானியங்களை ஒதுக்கவும், அவற்றை விநியோகம் செய்யவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கும் பகுதிகளில், மாநிலங்கள் சமூக சமையலறையை நடத்த வேண்டும் என்றும், பெருந்தொற்று முடிவுக்கு வரும்வரை இது தொடர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுக்கவேண்டும், தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மக்கள் குறித்த கணக்கெடுப்பு செய்து வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமற்னம் வலியுறுத்தி உள்ளது
மேலும் படிக்க....
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வாக்குறுதி!!
மீண்டும் கலைஞரின் உழவர் சந்தை திட்டம்
Share your comments