தமிழக அரசின் அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை முதலமைச்சர் நேரடியாக கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சர்களுக்கான மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23-Dec-21) தொடங்கி வைத்தார்.
சமீபத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி தற்போது அனைத்து துறைகளின் வளர்ச்சி பணிகளை முதலமைச்சர் நேரடியாக கண்காணிக்கும் வகையில் “CM Dashboard” என்ற மின்னனு தகவல் பலகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நல்வாழ்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீர்வளத்துறை, காவல்துறை என அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 என்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையிலான புதிய முயற்சியில் “CM Dashboard” என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அனைத்து துறை சார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் தானே கண்காணிக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த மின்னணு தகவல் பலகை மூலம் வாரம் ஒருமுறை மாநிலத்தின் அனைத்து செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த மின்னனு தகவல் பலகை மூலம் தலைமைச்செயலகத்தில் உள்ள தனது அலுவலக அறையில் இருந்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மென்பொறியாளர்கள் இணைந்து இந்த மின்னணு தகவல் பலகையை தயார் செய்துள்ளனர். தமிழ்நாடு 360 என்ற இந்தத் திட்டம் மூலம், தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும், ஆட்சி நிர்வாகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் முதலமைச்சர் தகவல்பலகை உருவாகி இருப்பது குறிப்பிடதக்கது.
முதலமைச்சர் அறையில் வைக்கப்படவுள்ள இந்த மின்னணு தகவல் பலகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்கள், தேர்தல் வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீதான நடவடிக்கைகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. அடுத்த ஒரு ஆண்டுக்கான திட்டங்கள் இந்தப் பலகையில் இடம்பெறும் எனவும், எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் நடைபெற்று வருகின்றன, பணிகளின் முன்னேற்றம், எங்கெல்லாம் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது போன்ற அனைத்து விவரங்களையும் இந்த தகவல் பலகை மூலம் முதலமைச்சர் நேரடியாக அறிந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் பலகை மூலம் அரசின் நலத்திட்டங்கள், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முதலமைச்சர் நேரடியாக தெரிந்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி திட்ட பணிகளில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் இந்த தகவல் பலகையில் சிவப்பு நிற எச்சரிக்கை காணப்படும் . இதனால் தொய்வு ஏற்பட்ட இடங்களில் பணிகள் எளிதில் கண்காணிக்கபட்டு, அவை துரிதப்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தன் அறையில் இருந்தபடியே, இன்றைய தங்கம் விலை நிலவரம், காய்கறி விலை நிலவரம் என அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விரைவில் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிஎம் டாஷ்போர்டு என்ற தகவல் பலகை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக இருக்கும் என்று தமிழக அரசின் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட ஐபிஎஸ், ஐஏஎஸ், அதிகாரிகளும் கூறியுள்ளனர். மத்திய பிரதேசம், ஆந்திரா, நாகலாந்து, இமாசலப்பிரதேசம், உத்தரக்காண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் முதலமைச்சருக்கான மின்னணு தகவல் பலகை முன்பே அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
Share your comments