பொங்கல் பண்டிகை முதில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து திரைத்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோய் பரவல் காரணமாக திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படமும், சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படமும் வெளியாக உள்ளது. மேலும் சில திரைப்படங்களும் வெளியாக தயார் நிலையில் உள்ளது.
முதல்வர் - விஜய் சந்திப்பு
இந்நிலையில், அண்மையில் நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பார்வையாளர்களின் அனுமதியை 100 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் 100% உறுதிபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது
தயாரிப்பாளர் சங்கம் நன்றி
திரையரங்குகள் தொடர்பான இந்த உத்தரவிற்கு திரையுலகினர் பலர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு தமிழக முதலமைச்சருக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் எங்கள் நன்றிகள். 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது, திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
திரைப்படம் பார்க்க வரும் அனைவரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
நெருங்கும் பொங்கல் பண்டிகை : களைகட்டும் கரும்பு விற்பனை!!
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 இன்று முதல் ரேஷன் கடைகளில் வினியோகம்!!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
Share your comments