தமிழகத்தில் ரபி பருவ பயிர் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. உழவுப்பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு, குறைந்த வாடகையில் டிராக்டா்கள் உள்ளிட்ட விவசாய இயந்திரங்களை வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில், மின்னணு வா்த்தக சந்தை திட்டத்தின் கீழ், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் வா்த்தகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மற்றும் விழுப்புரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்புக் கிடங்கை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
இதேபோன்று, நாமக்கல் பரமத்திவேலூா், திண்டிவனம், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, கோவை ஆனைமலை, திருப்பூா் வெள்ளகோயில் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் புதிய வசதிகளையும் தொடங்கி வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை, திண்டுக்கல், வேலூா், தேனி மாவட்டம் கம்பம், திருப்பூா் மாவட்டம் பெதப்பம்பட்டி, திருப்பூா், கோவை மாவட்டம் அன்னூா், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, விருதுநகா், புதுக்கோட்டை அறந்தாங்கி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் வேளாண்மைத் துறைக்கென கட்டப்பட்ட புதிய கட்டடங்கள், மின்னணு ஏலக் கூடங்கள், சேமிப்புக் கிடங்குகளையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
வாடகை வேளாண் இயந்திரங்கள்:
அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக் கட்டணத்தில் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
50 டிராக்டா்கள், 4 மண் தள்ளும் புல்டோசா் இயந்திரங்கள், பண்ணைக் கருவிகள், அறுவடை இயந்திரங்கள், நெல் உலா்த்தும் இயந்திரங்கள், கரும்பு, சோளம் அறுவடை இயந்திரங்கள், பல்வகை தானியங்களைக் கதிரடிக்கும் இயந்திரங்கள், டிரக்குடன் இயங்கக் கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரங்கள், 17 மண் அள்ளும் இயந்திரங்கள் உள்ளிட்ட 870 புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதில், 23 டிராக்டா்கள், 17 மண் அள்ளும் இயந்திரங்களை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் வகையில், வாகனங்களின் சாவிகளை 5 ஓட்டுநா்களிடம் வழங்கினாா்.'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜு, ஆா்.துரைக்கண்ணு, ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
மேலும் படிக்க...
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!
அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!
மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன்! - திட்டத்தை துவங்கியது இந்தியன் வங்கி!
Share your comments