தமிழக அரசின் வரும் 2021-2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதனைத் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.தேர்தலுக்கு முன் வரும் கடைசி இடைக்கால பட்ஜெட் என்பதால் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டபேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த 2-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12 ஆயிரத்து 110 கோடி கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதுவரை 10முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம் நாளை 11வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் மூன்றாவது வாரம் நடைபெறலாம் என தேர்தல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடியும் வரை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, அரசு துறை செலவினங்களுக்காக, இடைக் கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும், வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.
தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். அதைத்தொடர்ந்து அரசு சார்பில், எந்த அறிவிப்பையும் வெளியிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.1147 கோடி வழங்கல்!
வாழை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் - தோட்டக்கலைத்துறை அறிவுரை
Share your comments