1. செய்திகள்

+2 தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது தமிழக அரசு!

R. Balakrishnan
R. Balakrishnan
Plus Exam
Credit : DNA India

கொரோனா தொற்று பாதிப்பு நீங்காத நிலையில், மாணவர்கள் நலன் கருதி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படாது என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் குழுவினர், கல்வியாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டபின், முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இரண்டாம் அலை

நாடு முழுதும், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தினமும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, நோய் தொற்று குறைந்து வருகிறது. எனினும், முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.

ஆலோசனை

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு நடத்தவிருந்த பொதுத்தேர்வை (Public Exam) ரத்து செய்தது. அதை பின்பற்றி பல்வேறு மாநிலங்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. அதனால், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பது தொடர்பாக, கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தியது. அதனடிப்படையில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து, மூன்று நாட்களாக, பள்ளிகள் அளவில் துவங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவில், பெற்றோர், ஆசிரியர்கள்,ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களிடம், அரசு கருத்துக்களை கேட்டது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், ஊடகவியலாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உட்பட, பல்வேறு தரப்பினரிடம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில், கவனமுடன் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

MK Stalin
Credit : Dinamani

மாணவர்கள் நலன்

பல்வேறு தரப்பினரும், பொதுத்தேர்வு நடத்த ஆதரவாகவும், மறுத்தும் கருத்துக்களை தெரிவித்தனர். அதேநேரம், மாணவர்களின், உடல் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில், அனைத்து தரப்பினரும் உறுதியாக உள்ளனர்.கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது அலையும் (3rd Wave) வர வாய்ப்புள்ளது என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போதுள்ள விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே, தடுப்பூசி (Vaccine) செலுத்த இயலும். அவ்வயதுக்கு குறைவான, தடுப்பூசி போடப்படாத மாணவர்களை, ஒரே நேரத்தில் தேர்வு எழுத வரச்செய்வது, தொற்றை அதிகரிக்கச் செய்யலாம் என, வல்லுனர்கள் அறிவுரை வழங்கினர்.

தேர்வு ரத்து

மாநில கல்வி திட்டத்தின் கீழ் நடத்தப்படும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மட்டுமே, உயர் கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில், அரசு உறுதியாக உள்ளது. எனினும், தேர்வை தள்ளி வைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். அவர்கள் அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

குழு அமைப்பு

மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில், உயர் கல்வித்துறை செயலர், சென்னை பல்கலை துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்படும். இந்தக்குழு பிளஸ் 2 மாணவர்களுக்கு, எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும். குழு சமர்பிக்கும் அறிக்கை அடிப்படையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களை கொண்டு மட்டுமே, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.

பிரதமருக்கு கடிதம்

பெருந்தொற்று காரணமாக, தமிழகத்தில் பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும், 'நீட்' (NEET) போன்ற நுழைவு தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழக அரசு கருதுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள், இதுவரை எதுவும் வெளி வராத நிலையில், உயர்கல்விக்காக நடத்தப்படும், பல்வேறு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில், மாணவர்களின் உடல் நலன் மற்றும் மன நலனை கருத்தில் வைத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வி திட்ட அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை, தமிழக அரசு உறுதி செய்யும் என்று, முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வர் உத்தரவு

கொரோனா 3-ம் அலையை, வருமுன் தடுக்க சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!

English Summary: Tamil Nadu government cancels +2 exam Published on: 06 June 2021, 01:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.