தமிழகத்தில் தற்போதைக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து, பொது இடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று, தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்குக்கு அவசியமில்லை என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவு என்றும், தனியார் மருத்துவமனைகளில் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
Share your comments