வடகிழக்கு பருவமழை காலங்களில் மக்கள் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய முதல்வர், தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை நன்றாகப் பொழிந்து நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் சுமார் 24 சதவிகிதம் கூடுதலாக மழைப் பொழிவு இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு, குறிப்பிட்ட காலத்தில் பருவ மழை பொழிந்ததன் விளைவாக விவசாயிகள் உரிய நேரத்தில் பயிரிட்டு, நல்ல விளைச்சல் பெற்று, வேளாண் உற்பத்தி சிறந்து விளங்குகிறது.
வடகிழக்குப் பருவ மழை (North-Ease Monsoon)
தற்பொழுது வடகிழக்குப் பருவ மழை துவங்கவுள்ளதால், அதனை எதிர்கொள்வது குறித்தும், மேலும், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை காரணமாக எந்தெந்தப் பகுதிகளில் புயல், கனமழை ஏற்பட்டதென்றும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தடுத்து மக்களையும், விவசாயப் பெருமக்களையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள். வடகிழக்குப் பருவ மழையின்போது அரசு இயந்திரம் எப்படி செயல்பட வேண்டுமென்றும் தெரியப்படுத்தியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பருவ மழை காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை போன்ற அத்தியாவசியத் துறைகளின் மூலமாக, வடகிழக்கு பருவமழை பெய்கின்ற காலங்களில், மக்கள் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது.
தயார் நிலையில் அரசு இயந்திரம்
பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்கும், புயல் வீசுகின்றபொழுது சாலை ஓரங்களிலுள்ள மரங்கள் சாய்ந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. பருவமழையினால் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்கு படகுகள், அதேபோல, தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநிலப் பேரிடர் மீட்புக்குழு போன்றவை தயார் நிலையில் வைப்பதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
அத்தியாவசியப் பொருட்கள் நிலை
அதேபோல, அக்காலக்கட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு சுகாதாரத் துறை மூலமாக தேவையான மருந்துகள், மருத்துவ வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழையின்போது பெய்கின்ற மழைநீர் உபரியாக வெளியே செல்கின்ற கால்வாய்கள் சீர் செய்யப்பட்டிருக்கின்றன, வெள்ளத்தடுப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டு சீர் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் பெய்கின்ற
மழைநீர் தேங்காமல், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் மழைநீர் வெளியேறுகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மீனவர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
அதேபோல், மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றபொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தகவல் தொலைதொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு புயல் காலங்களில் முன்னெச்சரிக்கையாக தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழையின்போது புயல் வீசினாலும், கனமழை பெய்தாலும் அதிலிருந்து மக்களை மீட்பதற்கு அரசு அனைத்து வகைகளிலும் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
வடகிழக்கு பருவமழையால் எவ்விதத்திலும் மக்கள் பாதிக்காத அளவிற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க..
PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!
விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!
காற்று மாசுபாட்டை தடுக்க டிராக்டர்களுக்கும் நெறிமுறைகள் வகுப்பு!
Share your comments