நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவான 3.87 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.067 இலட்சம் ஏக்கர் அதிகம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
அரசின் சீரிய நடவடிக்கைகள்
இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பாண்டில் மேட்டூர் அணையின் (Mettur Dam) நீர்வரத்து திருப்திகரமானதாக இருந்ததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்றும் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, குறுவை நெல் சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ம் தேதியன்று பாசன நீர் திறந்துவிடப்பட்டது.
மேலும், பொதுப்பணித்துறை மூலம் பாசன வாய்க்கால்களும் உரிய காலத்தில் துர்வாருவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது. எனவே, கடந்த ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டு, காவேரி டெல்டா மாவட்டங்களில் (Delta Districts) உள்ள பாசன வயல்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவும், கடைமடை பாசன பகுதிகளுக்கு 25 தினங்களுக்கு முன்பாகவும் பாசன நீர் சென்றடைந்தது.
கொரோனா நெருக்கடியிலும் தயார் நிலை
கொரோனா (Corona) நோய்க்கான ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், முதலமைச்சரின் உத்தரவின்படி, குறுவை நெல் சாகுபடிக்குத் தேவையான குறைந்த வயதுடைய சான்று நெல் இரக விதைகளை அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் முன்கூட்டியே இருப்பு வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்மைத்துறை விநியோகித்தது. மேலும், தேவையான ரசாயன உரங்களை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் கடைகளில் இருப்பு வைத்திடவும், விவசாயிகளுக்கு உரங்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைகளினால், விவசாயிகள் நாற்றங்கால் மற்றும் நடவுப் பணிகளை முன்னதாகவே தொடங்கி, பாசன நீரை முழுமையாக பயன்படுத்தி நெல் நடவு மேற்கொள்ள வழிவகுத்தது. மேலும், திருந்திய நெல்சாகுபடி முறைகள், நேரடி நெல் விதைப்பு ஆகிய தொழில்நுட்பங்களாலும் சமுதாய நாற்றங்கால் முறையிலும் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தக்க காலத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறுவை சாகுபடியில் தமிழகம் சாதனை (TN record in kuruvai Cultivation)
அரசின் இத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளின் விளைவாக, இந்த ஆண்டில்,டெல்டா மாவட்டங்களில் 03.08.2020 அன்றைய தேதி நிலவரப்படி 3.870 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 2.803 இலட்சம் ஏக்கரை விட 1.067 இலட்சம் ஏக்கர் அதிகமாகும். மேலும் கடந்த 30 ஆண்டு வரலாற்றில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட அதிகபட்ச பரப்பு இதுவே ஆகும்.
பயிர் காப்பீட்டிலும் சாதனை (Crop insurance increased)
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுவை நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளை காப்பீட்டுத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு அரசு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிரினையும் காப்பீடு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 270 வருவாய் கிராமங்களை கூடுதலாக பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்து, இதுவரை 1.68 இலட்சம் ஏக்கரில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்யப்பட்டதைவிட, 1.03 இலட்சம் ஏக்கர் அதிகமாகும். தமிழ்நாடு அரசு உரிய காலத்தில் அனைத்துப் பணிகளையும் முன்கூட்டியே மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்த காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத சாதனையாக நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3.870 இலட்சம் ஏக்கரிலிருந்து 6.50 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் படிக்க...
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்பு - வானிலை மையம்!!
காதி நிறுவனம் சார்பில் பட்டு முகக்கவசங்கள் கொண்ட பரிசுப்பெட்டி அறிமுகம்!!
வேளாண் துறை சார்ந்த 112 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதி உதவி!!
Share your comments