தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மற்றும் முக்கிய நகரங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜோதிபுரம் திடலில் மாவட்டத் தலைவர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனி நாடு கேட்கிறார். அவர் தனி ஆளாகத்தான் நின்று கேட்கிறார். அது அவருடைய ஆசை. எனக்கும் ஆசை இருக்கிறது. நயினார் நாகேந்திரனுக்கு ஆசை இல்லாமலா போய்விடும். தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை கொடுப்பேன். 234 சட்டமன்ற தொகுதிகளை 117 என இரண்டாக பிரிக்க வேண்டும்.
இரண்டு இடங்களிலும் நாங்கள் முதலமைச்சர்கள் ஆக வருவோம் என தனது முதலமைச்சர் ஆசையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் பாண்டியநாடு பல்லவ நாடு என இரு பெயர்களுடன் தமிழகத்தை பிரிக்க வேண்டும். இதனை செய்ய முடியாது என யாரும் நினைக்க முடியாது. செய்யக்கூடிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். மோடி நினைத்தால் தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியும்.
மாவட்டங்களை நிர்வாக வசதிகளுக்காக பிரிப்பது போல் மாநிலத்தை இரண்டாக பிரிப்பது வளர்ச்சி எளிதாக இருக்கும். ஆந்திர பிரதேசத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலம் இருப்பது போல் தமிழகத்தை பிரிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இரண்டு இன்ஜின் கொண்டு இழுத்தால் சிறப்பாக இருக்கும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் கூடுதல் திட்டங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பாக அது அமையும்.
கேந்திர வித்யாலயா நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு கூடுதலாக வரவேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நவோதயா பள்ளிகள் வருவதை தடுத்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளனர். இதனால் மக்கள் முன்னேற்றம், கல்வி முன்னேற்றம் தடைபடுகிறது. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மாணவ மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதி திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் படிக்க
Share your comments