கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில் இன்று (19.08.2023) தமிழ்நாடு ஸ்டார்ட் அப் (StartUp) திருவிழா 2023 நிகழ்வு பிரம்மாண்டமாக தொடங்கியது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் ஸ்டார்ட் அப் நிர்வுனங்களுக்கு தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதியினை வழங்கினார்கள்.
கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைப்பெறுகிறது. இந்த நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவரது உரையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு-
”பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுடனான தொழில்நிறுவனங்கள் முக்கியம்தான். ஆனால், சிறு - குறு தொழில்களின் வளர்ச்சி அதைவிட முக்கியமானது. அந்த வகையில், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு அக்கறை செலுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் பங்கு முக்கியமானது.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில், சுமார் 450 அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு, அதைப் பார்வையிட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் வர இருக்கிறார்கள்.
அதேபோல், புத்தாக்கங்கள், புத்தொழில்கள் மற்றும் முதலீடுகள் பற்றி நடக்க இருக்கிற கருத்தரங்குகள். சந்திப்புகளில் பங்கேற்க, சுமார் 1500 பங்கேற்பாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட வல்லுநர்களின் கருத்துரைகள் இடம்பெற இருக்கிறது. இது பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கிற முதலீட்டாளர்கள் எல்லோரையும் மனதார வரவேற்கிறேன்.
புத்தாக்கங்கள் மற்றும் புதுயுகத் தொழில் முனைவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தவும். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகவும் கொண்டு, "Tamil Nadu Startup and Innovation Mission" உயிர் கொடுக்கப்பட்டு, பல்வேறு செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது".
2021 மார்ச் மாத நிலவரப்படி சுமார் 2300 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக, இந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காகி இப்போது 6800-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது.
புத்தாக்க சிந்தனையோடு தொழில் முனைவில் ஈடுபடுகிற தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு, 'டான்சீட்' எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், 10 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பெரு நகரங்களைத் தாண்டி மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 2022-23 ஆம் நிதி ஆண்டு மதுரை ஈரோடு மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளது” என அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு நிகழ்வில் பங்கேற்றோருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார் முதல்வர்.
மேலும் காண்க:
விண்ணப்பிக்க கடைசி 3 நாள்- அஞ்சல் துறையில் 30041 காலிப்பணியிடம்
Share your comments