தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவல் கிடைத்ததை அடுத்து முதல்வரை பார்த்து துக்கம் விசாரிக்க சென்னையிலிருந்து சேலம் கிளம்பிச் சென்றார். அப்போது கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூச்சுத்திணறலுக்காக தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மருத்துவமனை சென்று எக்மோ உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பற்றி மருத்தவர்களிடம் கேட்டறிந்தார். முதலமைச்சர் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றனர்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் அமைச்சரின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அவருக்கு 90 சதவீதம் நுரையீரல் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் கடுமையான மூச்சுத் திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.
பல்வேறு உடல் நல பிரச்சினைகளோடு இருக்கும் அமைச்சர் துரைக்கண்ணுவின் மிக சமீபத்திய சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டின் படி, அவரது நுரையீரல் 90% பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர் தற்போது எக்மோ சிகிச்சை, வெண்டிலேட்டர் ஆகியவற்றின் அதிகபட்ச ஆதரவைப் பெறுகிறார்.
மேலும் படிக்க...
வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் - தோட்டக்கலை துறை அறிவுரை!!
இறக்குமதியை குறைக்க இந்தியாவில் அதிகளவில் பெருங்காயம் சாகுபடி - இமயமலையில் சோதனை!
தண்ணீர் பயன்பாட்டின் சிக்கனம்! - "துணை நிலை நீர் மேலாண்மை திட்டம்" - வாரி வழங்கும் மானியம்!!
Share your comments