வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பதிவாக வாய்ப்பு (Expects Heavy Rain)
தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கோவை, நீலகிரி சேலம், நாமக்கல், மற்றும் தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பிற்பகலில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Heavy rain)
-
இன்று கர்நாடகா, கோவா கடற்பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
-
இன்று மற்றும் நாளை வடக்கு அரபிக்கடல் மற்றும் குஜராத் கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
9-ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில், கர்நாடகா, கோவா மற்றும் லட்சத்தீவுக் கடற்பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்று முதல் 12ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கனமழை எச்சரிக்கை
இதேபோல் இன்று முதல் 11ம் தேதி வரை அசாம், மேகாலயா, உத்தரபிரதேசம் , சிக்கிம், பீகார், மேற்கு வங்கத்தின் இமயலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிலும் குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
குண்டாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்... இந்த ஆசனங்களை செய்தால் போதும்!
சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிசயம் நிகழ்த்தும் பப்பாளி
Share your comments