செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறையின் அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜிக்கு தொடர்பான அனைத்து இடங்களிலும் அமலாக்கத் துறை கடந்த வாரம் சோதனை நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் சென்னையிலுள்ள ஒமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்த நிலையில், அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து வருகிற 28-ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அமைச்சரை மாற்ற வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையினை நீதிமன்றம் ஏற்றது. சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
யார் பொய் சொல்றா? – கோபமடைந்த அமைச்சர் மா.சு
ஆனால், அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி பொய்யான உடல்நல குறைப்பாடு மூலம் விசாரணையில் இருந்து தப்பிக்க முயல்வதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கையில், ”அறுவை சிகிச்சை பெறுவதற்கான தகுதியை அமைச்சர் செந்தில்பாலாஜி பெற்றுள்ளார். நாளை அதிகாலை அவருக்கு இதய அறுவச்சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை கூறி வரும் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, “தமிழ்நாட்டில் 20,000 அரசு மருத்துவர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான இ.எஸ்.ஐ மருத்துவர்கள் உள்ளனர்.
இவர்களை உறுதி செய்தப்பின் மேலும் பொய்யான உடல்நல பிரச்சினை எனக்கூறுவது ஒட்டுமொத்த மருத்துவர்களின் நேர்மை தன்மையினை சந்தேகிப்பது போல் உள்ளது” என பதிலளித்துள்ளார்.
அமைச்சரின் கைதினைத் தொடர்ந்து அவர் வகித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில்பாலாஜி மருத்துவமனை மாற்றப்பட்ட விவகாரம் மற்றும் அவரது உடல்நிலை தொடர்பாக அமலாக்கத்துறையானது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் நீதிமன்றம் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் உடனடியாக இந்த மனுவை விசாரிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
செந்தில்பாலாஜியின் துறை மிஸ்டர்-க்ளீன் அமைச்சரிடம் ஒப்படைப்பு- முழு விவரம்
Share your comments