பெரும் எதிர்ப்பார்புகளுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தை பெற்றது.
கடந்த 13.03.2023 முதல் 03.04.2023 வரை தமிழகத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு (மார்ச் / ஏப்ரல் -2023) பொதுத்தேர்வு நடைப்பெற்றது. அவற்றின் முடிவுகளை இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் (97.85%), திருப்பூர் (97.79%), பெரம்பலூர் (97.59%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. 4 வது இடத்தில் கோவை (97.57%), 5 வது இடத்தில் தூத்துக்குடி (97.36%), 6-வது இடத்தில் சிவகங்கை (97.26%), 7 வது இடத்தில் கன்னியாகுமரி (97.05), 8 வது இடத்தில் ஈரோடு (96.98%), அதன் தொடர்ச்சியாக நாமக்கல்ஆகிய (96.94%), அரியலூர் (96.88%), திருநெல்வேலி(96.61%), ராமநாதபுரம்(96.30), திருச்சி(96.02), தென்காசி, மதுரை, தஞ்சாவூர், கரூர், சேலம், சென்னை, நீலகிரி, திண்டுக்கல், புதுச்சேரி, தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருவாரூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை. கிருஷ்ணகிரி, வேலூர். காரைக்கால் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் 87.30% சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்:
தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை: 8,03,385. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை: 4,21,013 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை- 3,82,371. தேர்வில் பங்கேற்றவர்களில் தேர்ச்சிப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7,55,451 (94.03%). இதில் மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,49,697(91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த மே 2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,06,277. தேர்ச்சிப் பெற்றோர் 7,55,998. தேர்ச்சி சதவிகிதம் 93.76%.
துணைத்தேர்வு எப்போது?
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற ஜூன் 19 ஆம் தேதி துணைத்தேர்வு நடைப்பெற உள்ளது. சுமார் 47,934 (5.97%) பேர் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள 7533 மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை-2767. இதில் 100% தேர்ச்சிப் பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 326 ஆகும். +2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர்கல்வியில் சேர- 14417 எண்ணிற்கு அழைத்தால் உயர்கல்வி வழிகாட்டிக் குழு உதவி செய்யும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
Share your comments