ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையில் பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பருத்தி விளைச்சல் குறைவாக உள்ளதாலும், ஜின்னிங் மில்களில் பல்வேறு வகையான பருத்தி (பஞ்சு) கலக்கப்படுவதாலும், தரமான பஞ்சு கிடைப்பதில்லை. நூற்பாலைகளுக்கு பஞ்சு கிடைப்பதில் பற்றாக்குறை நீடித்து வருகிறது. பஞ்சு விலை உயர்வால், நூல் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், ஏற்றுமதியும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல தொழில்களும் பாதிக்கப்பட்ட நிலையில், ஜவுளித் தொழில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதனால், பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். பஞ்சு, நூல் பதுக்கலை தடுத்து நிறுத்த வேண்டும்.
பஞ்சு விலை உயர்வு (Cotton price Raised)
பஞ்சு, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி ஆண்டு முழுவதும் சீரான விலையில் விற்பனை செய்திட வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஜவுளித் தொழிலுக்கான மூலப்பொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் நோக்கில், ஏப்ரல் 14 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை அனைத்து பஞ்சு இறக்குமதிக்கும் சுங்க வரியும் ரத்து செய்வதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஜவுளி ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எதிர்பார்த்ததை விட குறைவான பயிர் விளைச்சல் இந்தாண்டு இருந்ததால் பஞ்சு விலை கடுமையாக உயர்ந்தது. பஞ்சு இறக்குமதிக்கு வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் வரி விதிக்காததால் இந்திய ஜவுளித் துறையின் ஏற்றுமதியில் போட்டி அதிகமானது.
அதனால், ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தியாவில் பஞ்சு இறக்குமதிக்கு செஸ் மற்றும் கூடுதல் கட்டண வரி உட்பட சுமார் 11% வரி விதிக்கப்படுகிறது. அதாவது 5 சதவீத அடிப்படை சுங்கவரியும், 5 சதவீத வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகின்றன.
தற்போது இந்த வரிகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த முடிவால், ஜவுளித் தொழில்துறையும், நுகர்வோரும் பயனடைவார்கள். சில்லறை பணவீக்கம் ஏற்பட்டதால் உள்நாட்டு ஆடை மற்றும் காலணி விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பணவீக்கத்தினால் பஞ்சு விலைகள் அதிகரித்தன. மார்ச் மாதத்தில் 9.4% அளவிற்கு பஞ்சு விலை உயர்ந்தது’ என்று அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க
காய்கறி நாற்று உற்பத்தி: கோடைமழை நடவுக்கு தயாராகும் விவசாயிகள்!
தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது!
Share your comments