அகில உலக தேயிலை தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில், முதல் முறையாக தேயிலை சம்மந்தமாக பொதுமக்களுக்கு தெளிவு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலா துறை மற்றும் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து வருகின்ற 20.05.2023 மற்றும் 21.05.2023 ஆகிய இரு நாட்களுக்கு தேயிலை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 20.05.2023 அன்று மனித சங்கிலி மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேயிலை கண்காட்சியினை, தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் முனைவர்.மு.முத்துக்குமார், அவர்கள் தலைமையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் முன்னிலையில், சுற்றுலாதுறை அமைச்சர் திரு.கா.ராமசந்திரன் அவர்கள் 20.05.2023 அன்று காலை 11:00 மணி அளவில் திறந்து வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட உள்ளார்கள்.
இந்த இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும் தேயிலை கண்காட்சியில், நாம் அன்றாடம் பருகக் கூடிய தேயிலைத் தூளின் பல்வேறுபட்ட வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் சுவையறியும், திறனும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு விற்பனைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கண்காட்சியில் சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்பட்டுத்தப்படவுள்ளது. இக்கண்காட்சியில் சுமார் 25க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கலப்படமில்லாத தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
மேலும், அகில உலக தேயிலை தினத்தையொட்டி 21.05.2023 அன்று இண்ட்கோசர்வ் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே, தேயிலை உற்பத்தி மற்றும் கலப்படமில்லாத தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோர் கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலையினை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசு பேருந்து நிறுத்தம் கொண்ட உணவகங்களில் முறைகேடா? இந்த எண்ணில் புகாரளிக்கவும்
மேலும், இக்கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு கலப்பட தேயிலைத் தூள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்முறை விளக்கம் மற்றும் கலப்படம் சம்மந்தமாக வண்ணபடங்களுடன் கூடிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. குறிப்பாக, தேயிலைத்தூள் தயாரிக்கும் இயந்திரங்களை காட்சிப்படுத்தி தேயிலையிலிருந்து தூள் தயாரிக்கும் முறை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு, விளக்கப்படுத்துவதோடு, நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு ரக தேயிலை உற்பத்தி முறை செய்முறை விளக்கமாக காண்பிக்கவும், நீலகிரி தேயிலையின் பாரம்பரியம் மற்றும் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும், இத்தேயிலை கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கண்டு களித்து, கலப்படமில்லாத தேயிலை தூளினை வாழ்க்கை முறையில் பயன்படுத்தி கொண்டு, உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித், அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
புதிய டிரைவிங் லைசென்ஸ் வாங்க, இனி RTO-வை சுற்றி வர வேண்டியதில்லை!
Share your comments