பஞ்சாப்பில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றிபெற்று மாநிலத்தில் முதல்முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது.
ஆம் ஆத்மி மாடல் ஆட்சி என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் பகவந்த் மான், பஞ்சாப்பிற்கு முதலீட்டை கொண்டுவரும் நோக்கில் கடந்த 11ஆம் தேதி ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், அவர் நேற்று ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தார். நேற்று, மாலை ஜெர்மனியின் லுப்தான்சா விமானத்தில் பயணித்து பகவந்த் மான் இந்தியா வரவிருந்த நிலையில், அவர் விமானத்தில் இருந்து திடீரென்று கீழே இறக்கப்பட்டார்.
மேலும், முதலமைச்சர் மான் வரவிருந்த அந்த விமானம் 4 மணிநேரம் காத்திருந்து தாமதமாக புறப்பட்டு இந்தியா வந்தது. இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் போதையில் இருந்த காரணத்தினால் தான் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார் எனவும், அவரின் செயலால் பஞ்சாப்பிற்கே தலைகுனிவு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின.
முன்னாள் முதலமைச்சரும், சிரோமணி அகாலிதளம் கட்சி தலைவருமான சுக்பீர் சிங் பாதல் , பகவந்த் மானின் நடவடிக்கையை கண்டித்து ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். பகவந்த் மான் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆம் ஆத்மி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பான சர்ச்சை வலுத்துவந்த நிலையில்,லுப்தான்சா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பதவில் கூறியதாவது, ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து டெல்லி வந்த விமானம் தாமதமாக கிளம்பியதற்கு வர வேண்டிய விமானத்தில் தாமதம் ஏற்பட்டு விமானத்தை மாற்ற வேண்டியிருந்ததே காரணம் என்றுள்ளது. பகவந்த் மான் போதையில் இருந்தாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அந்த நிறுவனம், டேட்டா பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி நபரின் தகவல்களை நாங்கள் பகிர மாட்டோம் என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
Share your comments