புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து தென்னை விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகத்தை வரும் 25-ம் தேதி தீவிர நிவர் புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக காற்றின் வேகம் சுமார் 120 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு, வேளாண் துறை ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதன் படி,
-
நல்ல காய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில் முதிர்ச்சி அடைந்த அல்லது முதிர்ச்சி அடையும் தருவாயில் உள்ள இளநீர் காய்களை பலத்த காற்று வீசத் தொடங்குவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். தென்னை மரங்களின் தலைப்பகுதியின் அடிப்பாகத்தில் அதிக எடையுடன் காணப்படும் தென்னை ஓலைகளை வெட்டி அகற்றவேண்டும்.
-
தென்னை மரங்களின் அடிப்பகுதியில் மண்ணால் உயரமாக அணைக்க வேண்டும். இதனால் மரங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
-
உடனடியாக தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதையும், உரமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும். இதனால் தென்னை மரங்களின் வேர்ப்பகுதி நன்கு இறுகி பாதிக்கப்படாமல், காற்றின் வேகத்தை தாங்கி நிற்கும்.
-
இதையும் மீறி தென்னை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் விவசாயிகள் தங்கள் தென்னை மரங்களை காப்பீடு செய்துகொள்ளலாம்.
-
குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4-ம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டு முதலும் 60-ம் ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம்.
-
ஒரு எக்டருக்கு சுமார் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்யமுடியும். 4 அல்லது 7 வயது முதல் 15 வயது உள்ள தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25-ம், 16 வயது முதல் 60 வயது உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50-ம் காப்பீடு கட்டணமாக செலுத்தவேண்டும்.
-
4 அல்லது 7 வயது முதல் 15 வயது உள்ள மரங்களுக்கு காப்பீட்டு தொகை மரம் ஒன்றுக்கு ரூ.900-ம், 16 வயது முதல் 60 வயது உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.1,750-ம் ஆகும்.
-
காப்பீடு செய்வதற்கு முன்மொழிவு படிவத்துடன், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், விவசாயியின் புகைப்படம், வட்டார வேளாண் உதவி இயக்குனரின் காப்பீட்டு திட்டத்துக்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், காப்பீட்டு கட்டணத்துக்கான வரைவோலையுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தென்னை மரங்களை பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க....
மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்!!
புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!
Share your comments