தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது..
இது மக்களின் அரசாங்கம், ஒரு கட்சியின் அரசல்ல என்று கவர்னர் குறிப்பிட்டார். இது நமது அரசு என்று மக்கள் அனைவரும் பெருமைப்படும் விதமாக, மாநில அரசு செயல்படும் என்று ஆளுநர் உறுதியளித்தார்.
சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கவர்னரின் ஆங்கில உரையின் தமிழாக்கத்தை செய்து வருகிறார், மாநிலம் முழுவதும் உழவர் சந்தை தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டார். பெருந்தொற்றுக் காலத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் பேசப்பட்டது.
எங்கும் எப்போதும் அரசு சேவைகளை இணையவழி சேவைகளைப் பெறத் தேவையான நட்வடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக் கொண்டார்.
சச்சார் குழுவின் பரிந்துரைகளின்படி அரசு செயல்படும். அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, சைபர் குற்றங்கள், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு உறுதியாக இருக்கும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
ஆளுநர் திருநங்கைகளுக்கான வாரியத்தை அமைத்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் பற்றி குறிப்பிட்டு, அவரை பாராட்டினார். ஒலிம்பிக் போட்டிகளில் மாநிலத்தை சேர்ந்த வீர-வீராங்கனைகள் பங்கேற்க தேவையான ஊக்கத்தை மாநில அரசு மேற்கொள்ளும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
சமூக நீதியும், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தமிழக மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வுசெய்துள்ளனர் எனவே, அனைவரும் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும் என்று மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநில போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அவிநாசி திட்டப் பணிகளை முழுமையாக முடித்திட திமுக அரசு உறுதியாக உள்ளது.
வேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். வெளிப்படைதன்மையுடன் கோவில்களின் நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவை கூட்டம் கூட்டுவது தொடர்பாக சமீபத்தில் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவும் ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். முறையான அழைப்பைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் அனுமதியளித்ததை தொடர்ந்து கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது.
மேலும் படிக்க:
தேனியில் காட்டு தீயினால் 50 ஏக்கர் கருகி நாசம்: அமைதியாக இருக்கும் அரசு.
மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட"மின்னகம்"- புதிய சேவை மையம் திறப்பு!!
Share your comments