சென்னை: தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
கோடைக் காலம் முடிந்து பருவ மழை தொடங்கியது முதலே, இந்தியாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால், காய்கறி விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
தலைநகர் சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறி செல்கிறது. இருப்பினும், கோயம்பேடு மார்கெட்டிற்கும் பெரும்பாலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே காய்கறிகள் வருகிறது. இதனால் அண்டை மாநிலங்களில் கனமழை பெய்யும்போது, சென்னையில் காய்கறி விலையேற்றம் தவிர்க்க முடியாது.
இப்போது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாகக் கனமழை காரணமாகச் சென்னையில் தக்காளி வரத்துக் கணிசமாகக் குறைந்துள்ளது இதன் காரணமாக, தக்காளி விலை கடந்த சில நாட்களாகவே சென்னையில் மளமளவென உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேட்டில் தினசரி 65 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படும் நிலையில், தொடர் மழையால் 40 முதல் 45 லாரிகள் மட்டுமே தக்காளி எடுத்து வரப்படுகிறது.
வரத்து குறைந்ததால் விலை மளமளவென உயரத் தொடங்கி உள்ளது. வழக்கமாக ஒரு கிலோ தக்காளி ரூ. 20 முதல் 25 ரூபாய்க்குத் தான் விற்பனை செய்யப்படும். ஆனால், இப்போது வரத்து குறைந்துள்ளதால். சென்னையில் ஒரு கிலோ தக்காளி இப்போது 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தச் சூழலில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் எனக் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் ஒரு கிலோ தக்காளி ரூ. 40-42க்கு விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தக்காளி விலை வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments